சண்டிகார்,
பஞ்சாப்பில் உள்ள விவசாயிகள், பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதற்கு, அரசு சட்டப்படியான உத்தரவாதம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 11 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஜ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளை, மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணை செயலாளர் பிரியா ரஞ்சன் தலைமையிலான குழுவினர் சந்தித்து பேசினர். இந்த குழுவினர், விவசாய சங்க தலைவரான ஜகஜித் சிங் தல்லேவால் என்பவரையும் சந்தித்து பேசினர்.
அவர் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொடர்ந்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அது இன்று 55-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், விவசாயிகளுடன் பிப்ரவரி 14-ந்தேதி மாலை 5 மணியளவில் சண்டிகாரில் கூட்டம் நடைபெறும். அதில், விவசாயிகளுடன் மத்திய அரசு சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என முறைப்படி தெரிவிக்கப்பட்டது.
இதனால், தல்லேவால் மருத்துவ சிகிச்சை பெற சம்மதித்து இருக்கிறார். இதனை மற்றொரு விவசாய தலைவரான சுக்ஜித் சிங் ஹர்தோஜாண்டே கூறியுள்ளார். எனினும், கோரிக்கைகள் நிறைவேறும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடரும் என தல்லேவால் கூறியுள்ளார்.