30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி இன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுகளாக சிறைபட்டுவரும் பேரறிவாளனின் வழக்கு தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் மத்திய அரசு தரப்பில், பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது. அப்போது பேசிய நீதிபதி 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் சிறையில் இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினார். அப்போது, ஏற்கனவே பேரறிவாளனுக்கு மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குடியரசு தலைவரால் மாற்றப்பட்டது. அப்படி இருக்கையில் அவருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது. எனவே தற்போது ஜாமீன் வழங்கக் கூடாது என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்க முடியாது. குடியரசு தலைவர், 72வது அரசியலமைப்பு பிரிவின் தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தியே முடிவெடுக்க முடியுமே தவிர ஆளுநர் முடிவெடுக்க முடியாது என்று வாதிடப்பட்டது.
இந்த விவகாரம் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வரும்போது, தமிழக அரசு முடிவெடுக்கவும் முடியாது என்று மத்திய அரசு வாதிட்டதற்கு தண்டனை குறைப்பு உச்சநீதிமன்றம் வழங்கியது தானே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து வாதிட்ட மத்திய அரசு, சம்மந்தப்பட்ட அரசுதான் விடுதலை செய்ய வேண்டுமென உச்சநீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டது. இதற்கு பதிலளித்த நீதிபதிகள், அப்படி என்றால் அதில் மாநில அரசுதான் என்று பதிலளித்தனர். இதற்கு வாதிட்ட மத்திய அரசு தரப்பு, இல்லை, அப்படி இல்லை. அது மத்திய அரசு ஏனெனில் வழக்கு விசாரணை, வெளிநாட்டு தொடர்பு உள்ளிட்டவை அடங்கியுள்ளதால் மத்திய அரசுக்கே அதிகாரம் என்றனர்.
இதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், அதிகாரம் குறித்து பிறகு விசாரிக்கிறோம், இப்போது ஜாமீன் தொடர்பாக விசாரிப்போம், எனவே ஜாமீன் தொடர்பாக வாதிடுங்கள் என்றனர். அப்போது பேசிய பேரறிவாளன் தரப்பு, பேரறிவாளனுக்கு 3 முறை பரோல் வழங்கப்பட்ட போதும் அவர் விதிகாளுக்கு உட்படு சரியாக நடந்து கொண்டுள்ளார். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு முதன்முறையாக ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பேரறிவாளன் வசிக்கும் பகுதியில் ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் கையெழுத்திட உச்சநீதிமன்றம் நிபந்தை விதித்து, வழக்கை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைத்தது. மேலும் அளிக்கப்பட்டுள்ள ஜாமீனானது இந்த வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பேரறிவாளன் எந்த தவறும் செய்யாதவர், இந்த வழக்கிற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. சிறையில் இழந்த 30 ஆண்டுகளை திரும்ப பெற வாய்ப்பு உண்டா. இல்லையே. நீதி சாகடிக்கப்பட்டுவிட்டது. இப்போது பேரறிவாளன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.