‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’ மீண்டும் மக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அமைச்சரவை, இந்த சட்டம் தொடர்பான உயர் மட்டக் குழுவினரின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான முக்கியமான நடவடிக்கையாக இது இருக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்க்க, எதிர்க்கட்சியினர் இதில் உள்ள சிக்கல்களை மேற்கோள்காட்டி வருகின்றனர்.

இதில் உள்ள சாதக பாதங்கள் குறித்து விவாதங்களை அரசியல் கட்சித் தலைவர்கள் முன்வைக்கின்றனர்.

1) இது உண்மையிலேயெ தேர்தல் செலவுகளைக் குறைக்க உதவுமா?

2) ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண இயலுமா?

3) இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு இதனால் பாதிக்கப்படுமா?

4) சிறிய கட்சிகள் இந்தச் சட்டத்தால் பாதிப்பைச் சந்திக்குமா?

என பல்வேறு சந்தேகங்கள் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகின்றன.

பிபிசி ஹிந்தியின் தி லென்ஸ் என்ற வாராந்திர நிகழ்வில் இந்த சந்தேகங்கள் குறித்து நிபுணர்களுடன் விவாதம் ஒன்றை நடத்தினார் கலெக்டிவ் நியூஸ்ரூமின் ஊடவியல் இயக்குநர் முகேஷ் ஷர்மா.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பல விதமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுவது தேர்தல் செலவுகவுகள்.

ஒரே நேரத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களை நடத்தும் போது நாட்டின் மேம்பாட்டு திட்டங்கள் சீராக தொடரும் என்றும், அரசுப் பணியாளர்கள் தொடர் தேர்தல் பணிகளை மேற்கொள்வதால் ஏற்படும் உளைச்சலில் இருந்து தப்பிப்பார்கள் என்றும் பலவிதமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

பிபிசி-யின் விவாத நிகழ்வின் துவக்கத்தில் பேசிய ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான உபேந்திர குஷ்வாஹா ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று பட்டியலிட்டார். பாஜக-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது இவரது கட்சி.

“வெவ்வேறு நேரங்களில் நடத்தப்படும் தேர்தல் காரணமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதை நாங்கள் உணர்ந்துள்ளோம். முதலில் தேர்தலுக்கான செலவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இரண்டாவதாக மேம்பாட்டு திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. எங்கேயும் எப்போதும் தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது. விளைவாக தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்துகின்றனர். இதனால் அங்கே வளர்ச்சித் திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன,” என்று கூறுகிறார்.

இருப்பினும் இந்த ஒரே நாடு ஒரே திட்டத்தில் சில பிரச்னைகள் இருக்கிறது என்றும் அதற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மசோதா அறிமுகம் செய்யப்படும் போது இது தொடர்பாக மேலும் பல தெளிவு கிடைக்கும். “மசோதா வரும் போது, சட்டரீதியாகவோ, அரசியலமைப்பு ரீதியாகவோ பிரச்னைகள் ஏற்படும் போது தேவையான திருத்தங்கள் கொண்டு வரப்படும். அதன் பிறகு முழுமையான ஒரு சட்டம் இருக்கும். அதனை வைத்து இன்னும் சிறப்பாக விவாதிக்க இயலும்,” என்று குஷ்வாஹா கூறுகிறார்.

காங்கிரஸ் கட்சி இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவிப்பை ஒரு ஏமாற்று வேலை என்று கூறுகிறது. இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள தொடர்பு தலைவரும் செய்தித் தொடர்பாளருமான சுப்ரியா ஸ்ரீநெத், “வருங்காலங்களில் பாஜக நிறைய தேர்தல் தோல்விகளை சந்திக்க உள்ளது. மக்களின் கவனத்தை ஈர்க்கவே இப்படியான திட்டத்தை அறிமுகம் செய்வதில் அக்கட்சி கவனம் செலுத்துகிறது,” என்று குற்றம்சாட்டினார்.

பாஜக-வின் கூட்டணி கட்சியினரே அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று சுப்ரியா நம்புகிறார்.

“இது ஏமாற்று வேலை. மோதிக்கே தெரியும் இந்த சட்டத்தை அமல்படுத்த இயலாது என்று. அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர பாஜகவுக்கு 362 உறுப்பினர்களின் ஆதரவு மக்களவையில் தேவை.

“ஆனால் மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையே 293 தான். மாநிலங்களவையிலும் அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். மேலும் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்காது என்றும் அவர்கள் அறிவார்கள்,” என்றும் கூறினார்.

சமாஜ்வாதி கட்சியின் தேசிய செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான அபிஷேக் மிஸ்ரா சுப்ரியாவின் கருத்துகளை ஏற்றுக் கொண்டார். பாஜக-வின் திசை திருப்பும் நடவடிக்கையே இது என்று அவரும் கூறினார்.

“பாஜக-விடம் உண்மையான பிரச்னைகள் என்று ஏதும் இல்லை. பேசுவதற்கும் செயல்படுத்துவதற்கும் ஒன்றும் இல்லை. இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பாஜக பரப்பியுள்ள வெறுப்பு அரசியலால் சோர்வடைந்துவிட்டனர். அதனால் தான் தற்போது புதிய பிரச்னையை கிளப்பியுள்ளனர். உண்மையில் இவர்களால் இதில் வெற்றி பெற இயலாது,” என்று கூறினார்.

இதில் உள்ள சாதக பாதகங்களை கேட்டு பிறகு தன்னுடைய கருத்தை முன்வைத்தார் தேசிய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் எஸ்.ஒய். குரேஷி.

ஒரே நாடு ஒரே திட்டம் என்பது திணிக்கப்படுவதாக குரேஷி கருதுகிறார். இதற்காக உருவாக்கப்பட்ட கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் அதன் பரிந்துரை குறித்து கேள்வி எழுப்பிய அவர் இந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை என்றும் கூறினார்

“2014-ஆம் ஆண்டு மோதி இது குறித்து பேசும் போது, தேசிய அளவில் விவாதம் ஏற்படும். பிறகு ஒருமித்த கருத்து ஏற்படும் என்றார். விவாதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒருமித்த கருத்து ஏதும் ஏற்படவில்லை. ஒருமித்த கருத்து இல்லாத போது, தார்மீக முடிவாக இந்த திட்டம் கைவிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த அரசாங்கம் இதனை திணிக்கப்பார்க்கிறது,” என்று கூறினார் குரேஷி.

ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டது.

அரசியல் சார்ந்த எந்த ஒரு குழுவுக்கும் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவரை நியமிப்பது நியாயமற்றது என்று குரேஷி தெரிவித்தார்.

“அவர்களின் பரிந்துரைகளைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். அவர்களின் பரிந்துரைகள் எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்காக எடுத்துக்காட்டாக இரண்டு மூன்று பரிந்துரைகளை இங்கே முன்வைக்கின்றேன்,” என்று கூறினார் குரேஷி.

“முதலில் நாம் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் குறித்து பேசுகிறோம். பஞ்சாயத்து, உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசவில்லை. எந்த தேர்தல்கள் ஒன்றாக நடத்தப்படுகிறது? இந்த மூன்று தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்,”

“இரண்டாவதாக, நூறு நாட்களுக்கு பிறகு பஞ்சாயத்து தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுகின்றனர். அப்படி நடத்தினால் அது எப்படி ஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தலாக கருதப்படும்? இது முற்றிலுமாக புதிய தேர்தல். அனைத்து செயல்முறைகளையும் மீண்டும் தொடர வேண்டும்.

“மூன்றாவதாக ஒரு சட்டமன்றம் கலைக்கப்பட்டால் மீண்டும் தேர்தல் நடத்தப்படும். பின்பு நாம் இதனை எப்படி ஒரே நேரத்தில் நடைபெறும் தேர்தல் என்று கூற முடியும்?” என்று மூன்று முக்கிய அம்சங்களை குரேஷி முன்வைத்தார்.

இது இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று விமர்சிக்கிறார் சுப்ரியா.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளை கலைப்பது எப்படி ஏற்புடையதாக இருக்கும்? 2029-ஆம் ஆண்டில் 17 மாநில அரசுகள் ஆட்சி செய்ய 2 அல்லது 3 ஆண்டுகள் மீதம் இருக்கும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தை கலைக்கும் உரிமையை உங்களுக்கு யார் வழங்கியது? இது மக்கள் வழங்கிய தீர்ப்பை அவமதிப்பது போன்று இருக்காதா? போன்று தொடர் கேள்விகளை அடுக்கின்றார் சுப்ரியா.

உபேந்திரா இதற்கு மறுப்பு தெரிவித்தார். கூட்டாட்சி அமைப்பின் மீதான தாக்குதல் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை என்று அவர் கூறினார்.

“நம்முடைய அரசியல் சாசனத்தில் உள்ள பிரிவுகள் காரணமாகவே நீங்கள் இன்று கூட்டாட்சி குறித்து இன்று பேசுகின்றீர்கள். அரசியலமைப்பு சட்டத்தின் படியே, அதில் ஏதேனும் திருத்தங்கள் தேவை என்றால் அதனை நிறைவேற்ற வேண்டும்,” என்று உபேந்திரா கூறுகிறார்.

“கூட்டாட்சி அமைப்பை யாரும் தாக்கவில்லை. அனைவரும் இதனை ஏற்றுக் கொண்டனர். நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தால், ஆளும் கட்சி நல்லதே செய்தாலும் அதனை நாம் எதிர்க்க வேண்டும். இந்த மன நிலையோடு இதனை நாம் எதிர்க்க கூடாது,” என்றும் அவர் கூறினார்.

“இந்த சட்டத்தில் எதையேனும் மாற்ற வேண்டும், நீக்க வேண்டும் என்றால் அரசாங்கத்திடம் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி உங்களின் கருத்துகளை கேட்க கோரிக்கை வைக்க வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

கமிட்டியின் முன்மொழிதல் படி இந்த திட்டத்தை அமல்படுத்த அரசியலமைப்பு சட்டத்தில் இரண்டு திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அரசியலமைப்பு சட்டப் பிரிவு 83 மற்றும் 172ல் இந்த மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.

சமாஜ்வாதி கட்சியின் அபிஷேக் மிஸ்ரே இந்த திட்டம் பிராந்திய கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறுகிறார்.

“தேர்தல் ஒரே நாளில் நடக்கலாம். 7 நாட்களிலோ, 70 நாட்களிலோ, 700 நாட்களிலோ கூட நடக்கலாம். பல தசாப்தங்களாக மக்கள் மத்தியில் நல்லுறவை வைத்திருக்கும் பிராந்திய கட்சிக்கு இதனால் பாதிப்பு ஏற்படும் என்று கூறுவது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது,” என்று தெரிவித்தார்.

இருப்பினும் அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்றுவதற்கு தான் அவர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறுகிறார்.

திருத்தங்கள் மூலம் அரசியலமைப்பு சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்தினால் பிறகு அரசியலமைப்பு சட்டமே முழுமையாக மாற்றப்பட்டுவிடும் என்று அவர் இந்த பிரச்னையை அணுகும் விதம் குறித்து கூறினார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த உபேந்திரா, புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படும் என்று கூறுவது தவறானது என்று கூறினார்.

உபேந்திரா போன்ற பலரும் இந்த திட்டம் தேர்தல் செலவுகளை குறைக்கும் என்று நம்புகின்றனர்.

தேர்தல் செலவுகளைக் குறைக்க அரசு எந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

“கடந்த தேர்தலுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது. இந்த நாட்டில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு செலவு செய்வதற்கான நிதி உச்ச வரம்பு என்று ஏதும் இல்லை. ஆனால் வேட்பாளருக்கு அது உண்டு. பிரிட்டனின் அரசியலை நாம் பின்பற்றுகிறோம். அங்கே அரசியல் கட்சிகளுக்கும் உச்ச வரம்பு இருக்கிறது.

அரசாங்கம் அந்த வரம்பை நிர்ணயிக்கலாம். உண்மையில் செலவுகளை குறைப்பதே இந்த சட்டத்தின் இலக்கு என்றால் அரசு உச்ச வரம்பை ரூ.60 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.6 ஆயிரம் கோடியாக அரசால் குறைத்து நிர்ணயிக்க இயலும்,” என்று விளக்கினார்.

இந்த கருத்தை ஏற்றுக் கொண்ட உபேந்திரா இது தொடர்பான பணிகளில் அரசு ஈடுபட வேண்டும் என்று விவாதத்தின் போது குறிப்பிட்டார்.

சுப்ரியா இது எப்படி செலவீனங்களைக் குறைக்கும் என்ற கேள்வியை எழுப்பினார். உங்களுக்கு விவிபேட்களும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் மூன்று மடங்கு அதிகமாக தேவைப்படும். இதற்கான சுமையை எங்கள் மக்கள் தான் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது திட்டங்கள் தொய்வடைவது பற்றியும் புதிய திட்ட அறிவிப்புகளை வெளியிட இயலாமல் போவது குறித்தும் பேசிய குரேஷி இதனை மறுக்கிறார். நான்கரை ஆண்டுகளாக பதவியில் இருந்தாலும் கூட, தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு இப்படி சிறப்பான திட்ட அறிவிப்புகள் வருவது எப்படி என்ற கேள்வியை எழுப்பினார்.

தேச நலனை கருத்தில் கொண்டு ஏதேனும் திட்டம் அறிவிக்கப்படும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு கொண்டு வரப்பட்டு பிறகு ஆணையத்தால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று மேற்கோள்காட்டினார்.

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறும் போது அரசின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்த வாக்காளர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் அதனை பாதிக்குமா?

ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிக்கும் வாய்ப்பு வாக்காளர்களுக்கு கிடைக்கிறது. அவர்கள் ஒரே நாளில் யாருக்கு தேசிய அளவிலும் மாநில அளவிலும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிடலாம் என்று நம்புகிறார் உபேந்திரா. ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவதால் இதில் என்ன பிரச்னை இருக்கிறது என்று தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

சுப்ரியாவும் அபிஷேக்கும் மாறுபட்ட கருத்தைக் கொண்டுள்ளனர். மக்கள் தங்களின் பிரச்னைகள் குறித்து பேசவும், குறைகள் பற்றி பேசவும் வெவ்வேறு காலங்களில் நடத்தப்படும் தேர்தல்கள் வாய்ப்பளிக்கிறது என்று கூறினார் அபிஷேக்.

“பஞ்சாயத்து தேர்தலோ, மேயர் தேர்தலோ வெவ்வேறு நேரங்களில் நடைபெறூம் தேர்தலின் போது மக்கள் தங்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கின்றனர். இது நடக்கிறதோ இல்லையோ, இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மக்களின் அதிகாரத்தை குறைக்கிறது,” என அபிஷேக் கூறுகிறார்.

வெவ்வேறு காலகட்டங்களில் தேர்தல் நடத்துவதால் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது பற்றிய மேலும் ஒரு கருத்தை குரேஷி முன்வைத்தார்.

“பாஜக எம்.பி. ஒருவர் மக்களிடம் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்பதை நான் கேட்டேன். பொதுமக்களுக்கு அதிகாரம் ஏதும் இல்லை என்பதால் அவர்களுக்கு தொடர்ந்து தேர்தல் நடப்பது மகிழ்ச்சியே அளிக்கிறது. அவர்களுக்கு வாக்களிக்கும் அதிகாரம் உள்ளது. அவர்களிடம் அந்த அதிகாரம் இருக்கும் வரை தலைவர்கள் மீண்டும் மீண்டும் மக்கள் முன்பு வந்து கைக்கட்டி நிற்பார்கள். இல்லையென்றால் அந்த எம்.பி-யை எத்தனை முறை மக்களால் பார்க்க முடியும். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வந்து செல்லும் அந்த எம்.பி-யின் புகைப்படத்தை போஸ்டர் அடித்து ஒட்டி அவரை காணவில்லை என்று மக்கள் தேட ஆரம்பித்துவிடுவார்கள்,” என்று கூறினார்.

தொடர்ந்து தேர்தல்கள் நடைபெறும் பட்சத்தில் பொதுமக்களின் நலன் பற்றிய பொறுப்பு அரசியல் கட்சி தலைவர்களுக்கு வருகிறது என்று நம்புகிறார் குரேஷி. புனேவில் இளைஞர்களுக்கான பாராளுமன்றமத்தில் பேசிய போது, பெண் ஒருவர் கூறிய கோஷம், “தேர்தல் வரும் தான் ஏழைகளுக்கு புலாவ் கிடைக்கிறது,” அவருக்கு பிடித்தது என்று விவாதத்தின் போது குரேஷி கூறினார்.

The short URL of the present article is: https://reportertoday.in/05e5

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons