திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணை ஹிஜாப் அகற்றி காட்டுமாறு வாக்குப்பதிவு மைய பெண் அலுவலர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான இஸ்லாமியர்கள் கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் போக மீதம் உள்ள இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் சில இடங்கள் தவிர மற்ற இடங்களில் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததை காண முடிந்தது.
மேலும் தேர்தலையொட்டி சிசிடிவி, வெப்ஸ்ட்ரீமிங் முதல் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டம் ஒழுங்கைப் பேணிக்காக்க சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மக்கள் அச்சமின்றி வாக்களிக்க செல்லலாம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் கூறி இருந்தது.
தேர்தல் ஆணையம் கூறியிருந்தது போல பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்த நிலையில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தார். அப்போது அங்கு இருந்த பாஜக பூத் கமிட்டி உறுப்பினர் ஒருவர் அவர் வாக்களிக்க எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விவகாரம் பூதாகரமானது. தமிழகம் முழுவதும் இவ்விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்திருந்தார்.
இதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஹிஜாப் அணிந்த பெண்ணுக்கு பாஜக பூத் கமிட்டி உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வாக்களிக்க வந்த பெண்ணை ஹிஜாபை அகற்றுமாறு வாக்குச்சாவடி அலுவலர் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் சுமார் அரை மணி நேரம் வாக்குப்பதிவும் நிறுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 17வது வார்டு வலைக்கார வீதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு மையம் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு வாக்களிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் வரிசையில் காத்திருந்து, வாக்குச்சாவடிக்குள் வந்தார். அப்போது அங்கு இருந்த வாக்குப்பதிவு மைய பெண் அலுவலர் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணை ஹிஜாப்பை அகற்றுமாறு கூறியுள்ளார். அதற்கு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கு ஏராளமான இஸ்லாமியர்கள் கூடி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.