தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணை நீர்மட்டம் கடந்த மாதம் 9-ந் தேதி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனைத்தொடர்ந்து 10-ந் தேதி அணையில் இருந்து பெரியாறு பிரதான கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.தொடர்ந்து கடந்த மாதம் 15-ந் தேதி திருமங்கலம் பிரதான கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து திருமங்கலம் பிரதான கால்வாயில் கடந்த மாதம் 25-ந் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இருந்தபோதும் பெரியாறு பிரதான கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின்படி கடந்த மாதம் 23-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை மொத்தம் 7 நாட்களுக்கு ராமநாதபுரம் வைகை பூர்வீக பாசன பகுதி 1க்கு வைகை அணையில் இருந்து ஆற்றில் 1504 மி.கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரை 5 நாட்களுக்கு சிவகங்கை வைகை பூர்வீக பாசன பகுதி 2க்கு அணையில் இருந்து வைகை ஆற்றில் மொத்தம் 619 மி.கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.தற்போது வைகை அணையில் இருந்து இன்று முதல் வருகிற 8-ந் தேதி வரை மொத்தம் 3 நாட்களுக்கு மதுரை வைகை பூர்வீக பாசன பகுதி 3க்கு வைகை ஆற்றில் மொத்தம் 343 மி.கன அடி திறக்கப்படுகிறது. அணையில் இருந்து வைகை ஆற்றில் இன்றும் நாளையும் வினாடிக்கு 1500 கன அடி வீதமும், வெள்ளிக்கிழமை வினாடிக்கு 970 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படும் என்று வைகை அணை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.வைகை அணையின் நீர்மட்டம் 63.35 அடியாக உள்ளது. வரத்து 1291 கன அடி. நேற்று வரை 1334 கன அடி திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 2169 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4276 மி.கன அடியாக உள்ளது.முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.10 அடியாக உள்ளது. வரத்து 884 கன அடி. நேற்று வரை 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 1500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 6143 மி.கன அடியாக உள்ளது.மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55.20 அடி. வரத்து 114 கன அடி. திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.41 அடி. வரத்து மற்றும் திறப்பு 64 கன அடி.வைகை அணையில் இருந்து 1500 கன அடி தண்ணீர் திறக்கப்படுவதால் தேனி, மதுரை மாவட்ட வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.