சிவகங்கை மாவட்ட பூர்வீகப் பாசனப் பகுதிகளான மானாமதுரை, திருப்புவனம் பகுதி பாசனத்துக்காக இன்று வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை அணையிலிருந்து கடந்த 23 -ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீா் திருப்புவனம், மானாமதுரை பகுதிகளைக் கடந்து பார்த்திபனூர் மதகு அணையைச் சென்றடைந்ததும், அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனக் கண்மாய்களுக்குத் திறந்துவிடப்பட்டது.
மேலும், பார்த்திபனூா் மதகு அணையின் இடது பிரதானக் கால்வாயில் சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியத்தில் உள்ள 41 பாசனக் கண்மாய்களுக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை சிவகங்கை மாவட்ட பூா்வீகப் பாசனப் பகுதிகளாக உள்ள மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளுக்கு வைகை அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. விரகனூர் மதகு அணையிலிருந்து பாா்த்திபனூர் மதகு அணை வரை உள்ள மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களைச் சோ்ந்த வலது, இடது பிரதானக் கால்வாய்களில் வைகை ஆற்றில் வரும் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 10,531 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இந்தப் பகுதிகளில் பெய்த மழையால் பாசனக் கண்மாய்கள் ஓரளவு நிரம்பி உள்ள நிலையில், தற்போது வைகை அணையில் திறந்து விடப்படும் தண்ணீரால் கண்மாய்களின் நீா்மட்டம் மேலும் உயரும். தற்போது, மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் விதைப்பு, நடவு முறைகளில் நெல் நாற்றுகள் பயிரிடப்பட்டு வளா்ந்து வருகின்றன.
இந்தப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழை, வைகை ஆற்றில் வரும் தண்ணீரால் நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.