சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.
மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அறிவித்திருந்தார். அதன்படி குளிர்காலக் கூட்டத் தொடருக்காக நாடாளுமன்ற மக்களவை கூடியதும், வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அதற்கான மசோதாவை தாக்கல் செய்தார்.
இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் ஓரிரு நிமிடங்களில் மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிரகாஷ் பிர்லா அறிவித்தார்.
பிற்பகல் இரண்டு மணிக்கு மாநிலங்களவையில் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக அமைச்சர்பிரல்ஹத் ஜோஷி தெரிவித்துள்ளார்
மக்களவையில் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற ஒப்புதல் வழங்கப்பட்டாலும், குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பான சட்டப்பூர்வ உறுதிமொழியை வழங்கிய பிறகே போராட்டம் முடிவடையும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திக்கைத் கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படுவது, அந்தச் சட்டங்களுக்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்த 750 விவசாயிகளுக்கு சமர்ப்பணமாகும் என்று திக்கைத் தெரிவித்துள்ளார்.
விவாதம் நடத்துவதற்கு மத்திய அரசு அஞ்சுவதாக திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் பானர்ஜி குற்றம்சாட்டினார்.
முன்னதாக, விவாதம் ஏதுமின்றி சட்டங்களைத் திரும்பப் பெற இந்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். “16 மாதங்களுக்கு முன்பு வேளாண் சட்டங்களை நிறைவேற்றிய ஜனநாயகமற்ற நடைமுறையைப் போலவே அவற்றைத் திரும்பப் பெறவும் முயற்சி நடக்கிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவை தொடங்குவதற்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குளிர்காலக் கூட்டத் தொடரின்போது அனைத்துக் கேள்விகளுக்கும் அரசு பதிலளிக்கும் என்று அவை தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறினார். அனைத்து விவாதங்களும் அவையின் மாண்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வேளாண்துறை சீர்திருத்தங்களுக்காக கடந்த ஆண்டு செப்டம்பரில் மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் போராட்டங்களைத் தொடங்கின.
ஓராண்டுக்கும் மேலாக போராட்டங்கள் நீடித்த நிலையில், கடந்த நவம்பர் 19-ஆம் தேதி வேளாண் சட்டங்களை திரும்பப் பெற அரசு திட்டமிட்டிருப்பதாகவும் குளிர்காலக் கூட்டத்தொடரில் இதற்கான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் எனவும் பிரதமர் மோடிஅறிவித்தார்.