தமிழகத்துக்கான 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10-ல் நடக்க உள்ள நிலையில், எம்.பி. பதவிகளை பிடிக்க திமுக, அதிமுகவில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரின் பதவிக் காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது. இதையொட்டி, இந்த பதவியிடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக எம்.பி.க்களான டிகேஎஸ் இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கேஆர்என் ராஜேஷ்குமார் ஆகியோரது பதவிக் காலமும், அதிமுக எம்.பி.க்களான ஏ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகியோரது பதவிக் காலமும் வரும் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த 6 இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10-ம் தேதி நடைபெறும் என்றும், வேட்புமனு தாக்கல் மே 24-ம் தேதி தொடங்கி, 31-ம் தேதியுடன் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் என்பது சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் நடைபெறும். தமிழகத்தில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் அடிப்படையில் ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கு 34 சட்டப்பேரவை உறுப்பினர் வாக்களிக்க முடியும். இதன்படி, 4 இடங்கள் ஆளுங்கட்சியான திமுகவுக்கும், எஞ்சிய 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைக்கும்.
அந்த வகையில் திமுகவுக்கு கிடைக்கும் 4 இடங்களில் ஒரு இடத்துக்கு 3 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. கூட்டணி கட்சியான காங்கிரஸிடம் இதற்கான ஆதரவைப் பெற திமுக முயற்சித்து வருகிறது.
திமுகவை பொருத்தவரை ஒரு இடம் தற்போதைய எம்.பி.யான ஆர்.எஸ்.பாரதிக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. ஏற்கெனவே அதிமுக சார்பில் எம்.பி.யாக இருந்து ராஜினாமா செய்த ஆர்.வைத்திலிங்கத்துக்கு பதில்தேர்வானவர் கேஆர்என் ராஜேஷ்குமார். இவர் ஓராண்டுமட்டுமே உறுப்பினராக இருந்ததால் அவருக்கு ஒரு இடம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஒரு இடத்தை காங்கிரஸ்கேட்க வாய்ப்பு உள்ளதாகவும், இன்னொரு இடத்துக்கு கடும் போட்டி நிலவுவதாகவும் திமுக தரப்பில் கூறப்படுகிறது.
அதிமுகவை பொருத்தவரை 2 இடங்களில் ஒரு இடத்துக்கு 2 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே, பாஜகவிடம் ஆதரவு கோர அதிமுக முயற்சிக்கும் எனதெரிகிறது. அதிமுகவில் ஒரு இடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஒதுக்கப்பட வாய்ப்புஉள்ளது. மற்றொரு இடத்துக்குஅவைத் தலைவர் தமிழ்மகன்உசேன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, சில முன்னாள் எம்.பி.க்கள் என பலரும்முயற்சிப்பதால் கடும் போட்டி நிலவுவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இடங்கள் பங்கீடு, ஆதரவுகோருவது தொடர்பாக திமுக, அதிமுக தரப்பு மற்றும் கூட்டணிகட்சிகளுடனான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என தெரிகிறது