வங்கிகள் கடன்களுக்காக விதிக்கும் அபராத வட்டி விதிப்பை ரிசர்வ் வங்கி தடை செய்து அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக நியாயமான அபராதக் கட்டணங்களை மட்டும் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது.
தற்சமயம், கடன்களுக்கான விதிமுறைகளை வாடிக்கையாளர்கள் முறையாக பின்பற்றவில்லை எனில், அந்த கடன் தொகை மீது அபராத வட்டி விதித்து, அதை வட்டியோடு சேர்த்துவிடுகின்றன. இதனைத் தடுப்பதற்காக புதிய திருத்தம் கொண்டுவரப்படுகிறது. எனினும், கிரெடிட் கார்டுகள், வர்த்தகக் கடன்கள் போன்றவற்றுக்கு, இந்த விதிமுறைகள் பொருந்தாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட புதிய விதிமுறைகளை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, இனி, கடனை திருப்பிச் செலுத்தத் தவறினால், நியாயமான அபராதக் கட்டணங்கள் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதை தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து, வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் அபராத வட்டி விதிக்க முடியாது.
ரிசர்வ் வங்கி மேலும் அறிவித்திருப்பதாவது:
* கடன் வாங்கியவர், கடனைத் திருப்பிச் செலுத்த தவறினால் விதிக்கப்படும் அபராதம், ‘அபராத கட்டணம்’ என்ற பெயரில் வசூலிக்கப்படும். இது, கடனுக்காக விதிக்கப்படும் வட்டி விகிதத்துடன் சேர்த்து, அபராத வட்டியாக வசூலிக்கப்படாது
* அபராத கட்டணங்களின் மீது கூடுதல் வட்டி கணக்கிடப்படாது. இருப்பினும், கடன் கணக்கில் கூட்டு வட்டிக்கான வழக்கமான நடைமுறைகளை இது பாதிக்காது
* வங்கிகள், வட்டி விகிதத்தில் எந்த கூடுதல் கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்த கூடாது என்றும், இந்த வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறது
* வங்கிகள், அதன் வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கடன்களுக்கான அபராதக் கட்டணங்களுக்கான கொள்கைகளை, உருவாக்கி கொள்ளலாம்
* எந்த ஒரு குறிப்பிட்ட கடன் திட்டத்துக்கும் பாகுபாடு காட்டாமல், அபராதக் கட்டணத்தின் அளவு நியாயமானதாக இருக்க வேண்டும்
* வங்கிகள், கடன் ஒப்பந்தம் மற்றும் அபராதம் குறித்த காரணத்தை, வாடிக்கையாளர்களுக்கு தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்
* கடனைத் திருப்பி செலுத்தாததற்கான நினைவூட்டல்களை அனுப்பும்போது, அபராதக் கட்டணத் தொகை குறித்த தகவல்களையும் அனுப்ப வேண்டும்
* அபராதம் விதிக்கப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், சம்பந்தப்பட்ட நபருக்கு தெரிவிக்கப்பட வேண்டும்
* தனிநபர் கடன்களுக்கு விதிக்கப்படும் அபராத கட்டணங்கள், வணிக நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணங்களை விட, அதிகமாக இருக்கக்கூடாது
* நிறுவனங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கு, இந்த அறிவிப்பு வெளியான ஆறு மாதத்திற்குள், புதிய அபராதக் கட்டண முறைக்கு மாற வேண்டும். இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அபராத வட்டி விதிப்பதற்கு பதிலாக, நியாயமான அபராதக் கட்டணங்களை மட்டுமே வசூலிக்க வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நிலையான வட்டிக்கு மாற வாய்ப்பு
கடன் வாங்குபவர்களுக்கு, நிலையான வட்டி விகிதங்களுக்கு மாறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:வங்கிகள் கடன் வழங்கும் போது, அடிப்படை வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றத்தினால், மாதத் தவணை தொகை அல்லது தவணை காலம் ஆகியவற்றில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கடன் வாங்குபவர்களுக்கு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
மேலும் மாதத் தவணை தொகை அல்லது தவணை காலம் அதிகரிக்கப்பட்டால் அதை வாடிக்கையாளருக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். வட்டி விகிதங்களை மாற்றி அமைக்கும் நேரத்தில், வங்கிகள் அதன் கொள்கைகளின் அடிப்படையில், கடன் வாங்குபவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, நிலையான விகிதத்திற்கு மாறுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.
மேலும் இவ்வாறு எத்தனை முறை மாற அனுமதிக்கப்படுவார் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.கடனை, பகுதி அல்லது முழுமையாக முன்கூட்டியே செலுத்துவதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது.