2014ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடும் பிரதமர் மோடி, இந்த ஆண்டு,ஹிமாச்சல பிரதேச மாநிலம் லெப்சா என்ற இடத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார். அவர்கள் மத்தியில் பேசும் போது, ‛‛ ராமர் எங்கு இருக்கிறாரோ அந்த இடம் தான் அயோத்தி எனக்கூறுவார்கள். ஆனால், என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் எங்கு உள்ளனரோ அந்த இடம் தான் எனக்கு அயோத்தி” என்றார்.
பிரதமர் மோடி மேலும் பேசியதாவது: நமது ஆயுதப்படைகளை நினைத்து பெருமைப்படுகிறேன். எந்த சவாலையும் சந்திக்க வீரர்கள் தயாராக உள்ளனர். அனைத்திலும் நமது வீரர்கள் முன்னிலையில் நிற்கின்றனர். ராணுவ வீரர்களுக்கு நாடு கடமைப்பட்டு உள்ளது.
தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி செல்கிறது. இந்தியாவில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. 140 கோடி மக்கள் உங்களுடன் உளளனர். உங்களுக்காக ஒவ்வொரு இந்தியரும் பிரார்த்தனை செய்கின்றனர்.
பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடுகிறேன். இங்கிருந்து மக்களுக்கு வாழ்த்து சொல்வது சிறப்பானது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். ராமர் எங்கிருக்கிறாரோ அந்த இடம் தான் அயோத்தி என கூறுவார்கள். ஆனால், என்னை பொறுத்தவரை, இந்திய ராணுவ வீரர்கள் எங்கு உள்ளனரோ அந்த இடம் தான் எனக்கு அயோத்தி.
உலகம் தற்போது சந்திக்கும் பிரச்னைகளுக்கு மத்தியில் இந்தியா மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அது போன்ற சூழ்நிலைகளில் இந்தியாவின் எல்லை பகுதிகள் பாதுகாப்பாக இருக்க வேண்டியது முக்கியம். நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி வருகிறோம். அதில் உங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது.
எல்லையில், வீரர்கள் இமயமலையை போல் உறுதியாக நிற்பதால், நமது நாடு பாதுகாப்பாக உள்ளது.
இவ்வாறு மோடி பேசினார்.