தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்ட, ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் கைது செய்யப்பட்டார்.
ஜீவஜோதியை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு, அதற்குத் தடையாக இருந்த சாந்தகுமாரை கொன்றதாக ராஜகோபால் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராஜகோபால், உடல்நலக் குறைவால் 2019-ல் உயிரிழந்தார். இந்நிலையில், தஞ்சாவூரில் வசித்து வரும் ஜீவஜோதி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: தனியார் யூடியூப்சேனலில் ‘சரவண பவன்ராஜகோபால்-ஜீவஜோதிவழக்கின் உண்மையே இதுதான்’ என்ற தலைப்பில், பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் ரஹீம் என்ற தடா ரஹீமின் நேர்காணல் கடந்த 18-ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதில், இந்த வழக்குக்கு சிறிதும்சம்பந்தம் இல்லாத தடா ரஹீம், தான் சிறையில் இருந்தபோது ராஜகோபாலும் உடனிருந்தார், அவரது வழக்கு குறித்தும், என்னைப் பற்றியும் நிறைய விஷயங்கள் கூறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். இதில், ஆபாசமான மற்றும் உண்மைக்குப் புறம்பான பல தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தீர்ப்பளித்தபெண் நீதிபதி குறித்தும் தரக்குறைவாகப் பேசியுள்ளார்.
அவர் கூறிய பொய்யான தகவல்கள், எனது பெண்மைக்கும், நடத்தைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளன. தீர்ப்பளித்த நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்கும் விதமாகவும் உள்ளது.
அந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். எனவே, உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறியதடா ரஹீம் மற்றும் சம்பந்தப்பட்ட வீடியோவை யூடியூப் சேனலில் வெளியிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த வீடியோவை நீக்க வேண்டும். இவ்வாறு புகாரில் ஜீவஜோதி தெரிவித்துள்ளார்.