கூடலூர்:தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றிய போதும் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக முக்கிய அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. குறிப்பாக மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்படுவதுடன் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாய பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மீண்டும் மழை பெய்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது.அணைகளின் நீர் மட்டம் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 123.95 அடியாக உள்ளது. வரத்து 1617 கன அடி. நேற்று 700 கன அடி மட்டுமே திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 1333 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3410 மி.கன அடியாக உள்ளது. பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 61.02 அடியாக உள்ளது. வரத்து 1379 கன அடி. திறப்பு 69 கன அடி. இருப்பு 3802 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 53.70 அடி. வரத்து 54 கன அடி. திறப்பு 100 கன அடி. இருப்பு 409 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.54 அடியாக உள்ளது. இதனால் அணையின் கரையோர பகுதி மக்களுக்கு 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் வரத்து 123 கன அடி. திறப்பு 97 கன அடி. இருப்பு 100 மி.கன அடி. பெரியாறு 20, தேக்கடி 20, கூடலூர் 20.4, உத்தமபாளையம் 12.6, சண்முகாநதி அணை 4.6, போடி 51.8, சோத்துப்பாறை 31, வீரபாண்டி 18.4, அரண்மனைபுதூர் 16.6 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.