தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் கடந்த இரு நாட்களுக்கு முன்னதாக கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து வாந்தி, மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று (மே 15) வரை விழுப்புரத்தில் 13 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும் உயிரிழந்திருந்தனர். மற்றவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தனர்.
பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்த நிலையில், விழுப்புரம் எஸ்.பி., ஸ்ரீநாதா, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி.,க்கள் உட்பட பல போலீஸ் அதிகாரிகள், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர். வழக்கு சி.பி.சி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது. செங்கல்பட்டு எஸ்.பி., பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சிகிச்சையில் இருந்து வந்த மரக்காணம் அடுத்த காவடி கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் இன்று காலை உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.