சென்னையில் நடந்த லியோ படத்தின் சக்ஸஸ் மீட்டில் விஜய் பேசிய பேச்சு, அவர் அரசியலுக்கு வரக்கூடுமா என்ற பேச்சுகளை மீண்டும் எழுப்பியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
பொதுவாக விஜய் நடிக்கும் படங்களுக்கு, அந்தப் படங்கள் ரிலீஸாவதற்கு முன்பாக நடக்கும் பாடல் வெளியீட்டு விழாக்களும் அதில் விஜய் பேசும் பேச்சுகளும் வெகுவாகக் கவனிக்கப்படும்.
ஆனால், லியோ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை கடைசி நேரத்தில் தயாரிப்புத் தரப்பு ரத்து செய்வதாக அறிவித்தது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இப்போது லியோ திரைப்படம் வெளியாகி 12 நாட்களில் 540 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அறிவித்திருக்கும் நிலையில், உற்சாகமாக ஒரு சக்ஸஸ் மீட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
படக்குழுவினர், விஜய் ரசிகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்த விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. பாடல் வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதில் ஆளும் தரப்பினரின் பின்னணி இருந்ததாகவெல்லாம் கூறப்பட்ட நிலையில், அது குறித்து விஜய் பேசுவாரா என்பதெல்லாம் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டது.
இந்த விழாவில் விஜய் பேசியதில் சில பகுதிகள் கவனிக்கத்தக்கதாக இருந்தன.
ரசிகர்களைப் பற்றிப் பேசும்போது, “நீங்க எனக்கு காட்டுற அன்புக்கு, என் உடம்ப செருப்பா தச்சு உங்களுக்கு போட்டாக் கூட பத்தாது.. நீங்க எல்லாம் பிளடி ஸ்வீட்” என்றார்.
நடிகர்களுக்கு வழங்கப்படும் பட்டங்கள் குறித்துப் பேசிய அவர், “புரட்சி தலைவர்-னா ஒருத்தர் தான். புரட்சி கலைஞர் என்றால் ஒருத்தர் தான். நடிகர் திலகம்-னா ஒருத்தர் தான். உலகநாயகன் என்றால் ஒருத்தர் தான், சூப்பர் ஸ்டார் என்றால் ஒருத்தர் தான். தல என்றால் ஒருத்தர் தான். தளபதி என்றால் உங்களுக்கு தெரியும். மன்னர்களுக்கு கீழ் அவங்க இருப்பாங்க. இங்கே மக்கள் தான் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழ் இருக்கும் தளபதி நீங்க ஆணையிடுங்க நான் செய்கிறேன்,” என்றார்.