லக்னோ: உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காங். உட்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் முற்றுகையிட்டு வருவதால் இந்தப் பகுதி அரசியல் போராட்டக் களமாக மாறியுள்ளது. வன்முறை நடந்த பகுதிக்கு செல்ல முயன்ற சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங். பொதுச் செயலர் பிரியங்கா உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. அரசு அமைந்துள்ளது. இங்கு அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி எல்லையில் விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.அதில் பஞ்சாப் உத்தர பிரதேசத்தின் சில பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று வருகின்றனர். உத்தர பிரதேசத்தில் சில இடங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
8 பேர் பலி
பா.ஜ. தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதுபோல உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் நேற்று முன்தினம் நடக்கவிருந்த பா.ஜ. கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் கார் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது மோதியதாக செய்தி பரவியது.இதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது; நான்கு விவசாயிகள் உட்பட எட்டு பேர் பலியாயினர்; மேலும் பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது.
கொந்தளிப்பாக இருப்பதால் லக்கிம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து யாரும் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.வன்முறை தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து 225 கி.மீ. தொலைவில் உள்ள வன்முறை சம்பவம் நடந்த பகுதிக்கு செல்வதற்கு பல கட்சித் தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்; அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ளதால் அனைத்து அரசியல் கட்சிகளும் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி உ.பி.யை போராட்டக் களமாக மாற்ற முயற்சித்து வருகின்றனர்.வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தாருக்கு நேரில் ஆறுதல் தெரிவிப்பதற்காக படையெடுத்து வருகின்றனர்.
பிரியங்கா கைது
லக்கிம்பூர் நோக்கி வந்த காங்.கின் பிரியங்காசமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் என பலரும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.காங். தலைவர் சோனியாவின் மகளும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா மாவட்ட எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார்.அப்போது போலீசாருடன் கட்சியினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே போலீசார் தன்னிடம் அத்துமீறி நடந்ததாக சமூக வலைதளத்தில் பிரியங்கா பதிவிட்டுள்ளார்.
பிரியங்கா கைது செய்யப்பட்டு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப்பட்டார். அங்கு துடைப்பத்தால் சுத்தம் செய்வது போன்ற படத்தை சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டார். மேலும் அவர் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையே காங். முன்னாள் தலைவரான ராகுல் தன் சகோதரி பிரியங்காவுக்காக சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுஉள்ளார்.
அகிலேஷ் தடுத்து நிறுத்தம்
‘பிரியங்கா நீ எதிர்ப்பை காட்டாதே; உன் தைரியத்தை பார்த்து அவர்கள் பயப்படுகின்றனர். நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் நடத்தும் அஹிம்சை போராட்டம் வெற்றி பெறுவதை உறுதி செய்வோம்’ என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.காங்.கைச் சேர்ந்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் பஞ்சாப் முதல்வர்சரண்ஜித் சிங் சன்னி ஆகியோர் லக்னோ விமான நிலையத்தில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டுஉள்ளது.உ.பி. முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் லக்கிம்பூருக்கு செல்வதற்கு முயன்றார். லக்னோவில் உள்ள அவருடைய வீட்டருகே அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.இதையடுத்து சாலையில் அமர்ந்து கட்சியினருடன் சேர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
அதன்பின் அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வேனை சமாஜ்வாதி கட்சியினர் தீ வைத்து எரித்தனர்.முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் தலைவருமான மாயாவதி இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது கட்சியைச் சேர்ந்த எஸ்.சி.மிஸ்ரா உள்ளிட்டோர் லக்கிம்பூர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் மற்றும் சிவ்பால் யாதவ் காங். மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித் பிரமோத் திவாரி என பலரும் லக்கிம்பூருக்கு செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.
விவசாயிகள் கோரிக்கை
மத்திய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்கக்கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கடிதம் எழுதியுள்ளனர். வன்முறை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் நேற்று அதிகாலையில் லக்கிம்பூருக்கு வந்தார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் அவர் மனு கொடுத்தார்; அதுவரை விவசாயிகள் போராட்டம் தொடரும் என அவர் அறிவித்திருந்தார்.
அமைச்சரை நீக்க வலியுறுத்தல்
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி பகுதியில் நடந்த வன்முறை சம்பவத்தை முன் வைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதில் சம்மந்தப்பட்ட மத்திய
உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவையும் அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ராவையும் காப்பாற்ற ஆதித்யநாத் அரசு முயற்சிப்பதாக சாடி உள்ளனர்.மேலும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை உடனடியாக பதவியில் இருந்து நீக்கவும் அவரது மகன் ஆஷிஷ் மிஸ்ராவை கைது செய்யவும் காங்கிரஸ், திரிணமுல் காங். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.
நீதி விசாரணை
வன்முறையில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா 45 லட்சம் ரூபாய், குடும்பத்தில் ஒருவருக்கு உள்ளூர் அளவில் அரசு வேலை வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. காயமடைந்தோருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவின் நீதி விசாரணைக்கும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.இழப்பீடு தொடர்பாக விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமைச் செயலர் அவானிஷ் அவஸ்தி தெரிவித்தார்