தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பானது ஜனவரி 3-ந் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படவுள்ள நிலையில் அதனுடன் பரிசுத்தொகையும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் நிலவுகிறது
2022-ம் ஆண்டு தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 22 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பினை 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்ப அட்டைதாரர்களுக்கு பயனாளி ஒருவருக்கு ரூபாய் 505 செலவில் வழங்க மொத்தம் ஆயிரத்து 88 கோடியே 17 லட்சத்து 70 ஆயிரத்து 300 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது.
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 21 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்க உத்தரவிட்ட நிலையில், கரும்பு விடுபட்டிருந்ததை அடுத்து, கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொரானா தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இருந்ததை கருத்தில் கொண்டு பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட 2500 ரூபாய் வழங்கப்பட்டது
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு உடன், பொங்கல் பரிசுத் தொகையை வழங்க முடியுமா என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு உயர் அதிகாரிகளிடம் நிதி நிலைமை குறித்து விரிவாக ஆலோசித்து உள்ளார்.
பொங்கலுக்கு ரூ. 1000 வழங்க முடியுமா என்று ஆலோசித்ததாக தெரிகிறது. இது சம்பந்தமாக தமிழக அரசு தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. எனவே அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.