குடியரசுத் தலைவரும், ஆளுநரும் சட்டத்துக்கு உட்பட்டவர்களே என கருத்து தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பேரறிவாளன் விவகாரத்தில் மத்திய அரசு உரிய முடிவை எடுக்காவிட்டால் அவரை விடுவிப்பது குறித்து நாங்கள் பரிசீலிப்போம் என தெரிவித்துள்ளனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “ஆளுநர், மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவரே. அவர் தனித்த கண்ணோட்டத்துடன் செயல்பட முடியாது” என்று தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க விரும்பினால் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்திருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இதே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், “இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்துள்ளார். எனவே, குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கும்வரை பொறுத்திருக்க வேண்டும். அமைச்சரவையின் முடிவை ஏற்பது அல்லது நிராகரி்ப்பது அல்லது மீண்டும் ஆளுநருக்கே திருப்பி அனுப்புவது என இந்த 3 வாய்ப்புகள்தான் குடியரசுத் தலைவருக்கு இருக்கிறது. அதை அவர் சட்டத்துக்கு உட்பட்டு செய்வார்” என தெரிவித்தார்.
அதையேற்க மறுத்து நீதிபதிகள் தெரிவித்ததாவது:
இது மாநில அரசின் உரிமை சார்ந்த விஷயம் மட்டுமின்றி, 30 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்து வரும் பேரறிவாளனின் விடுதலை தொடர்பான விஷயமும்கூட. மாநில அமைச்சரவை தனக்கு அனுப்பி வைத்த தீர்மானம் மீது தனக்குரிய சட்ட அதிகாரம் 161 பிரிவின்படி ஆளுநர்தான் முடிவு எடுக்க வேண்டும். அதைவிடுத்து அதை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்க அவருக்கு அதிகாரம் உள்ளதா என்பது முக்கியமான கேள்வி.
மாநில அமைச்சரவை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்புகிறது என்றால் அதற்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும். இதுதொடர்பாக ஏற்கெனவே பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின் வாயிலாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்டோரை முன் கூட்டியே விடுவிப்பது தொடர்பான அமைச்சரவையின் தீர்மான நகலை கடந்த ஆண்டு ஜன.27-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார். தற்போது 2022 மே மாதம். ஆனால், இந்த பரிந்துரையை ஆளுநர் சமீபத்தில்தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததாக மத்திய அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது.
பேரறிவாளன் சிறைக்குள் இருந்தபடியே தனது கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டுள்ளார். எந்தவொரு ஒழுங்கீனத்திலும் அவர் ஈடுபடவில்லை. சிறையில் பல ஆண்டுகளாக இருந்ததால் பல்வேறு நோய்களுக்குத்தான் அவர் ஆட்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தரப்பில் மேற்கொண்டு எந்தவொரு சட்டப்பூர்வ வாதங்களையும் முன்வைப்பதற்கு இல்லை என்றால் பேரறிவாளனை விடுவிக்கும் விஷயத்தில் நாங்களே முடிவு எடுக்கப் போகிறோம். அதற்கு எல்லா அதிகாரமும் இந்த நீதிமன்றத்துக்கு உள்ளது. ஏனெனில், பேரறிவாளன் சட்டச் சிக்கல்களை எதிர்நோக்காமல் தனது விடுதலைக்கான வாய்ப்புகளை மட்டுமே எதிர்நோக்கியுள்ளார். இந்த அம்சங்களை மத்திய அரசு கருத்தில் கொண்டு உரிய முடிவை எடுக்காவிட்டால் அவரை விடுவிக்க உத்தரவிடுவது குறித்து நாங்கள் பரிசீலிப்போம்.
இதுதொடர்பாக குடியரசுத் தலைவருக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்த ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டத்துக்குட்பட்டு பேரறிவாளன் விவகாரத்தில் நாங்கள் இறுதி முடிவை எடுப்போம். குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ யாராக இருந்தாலும் அவர்களும் இந்திய அரசியல் சாசன சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான்.
இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை வரும் 10-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.