வங்க கடலில் தென் கிழக்கு பகுதியில் நேற்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்தது.இதன் காரணமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தது.
பல இடங்களில் மிக பலத்த மழை பெய்தது.இன்று (புதன்கிழமை) அதிகாலை 5.30 மணி அளவில் அந்த குறைந்த காற்றழுத்தம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை இலக்கா அறிவித்து இருந்தது. அது புயல் சின்னமாக மாறுவதால் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று சற்று தாமதமாக மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 6 மணி நேர தாமதத்திற்கு பிறகு அந்த புயல் சின்னம் மேலும் வலுவடைய வாய்ப்பு இருப்பதாக வானிலை இலக்கா அதிகாரிகள் அறிவித்தனர்.
வங்க கடலில் மேற்கு வட மேற்கு திசை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நகர்வதால் இன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
டெல்டா மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது.புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் பரவலாக இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று இரவும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று காலை வானிலை இலக்கா அதிகாரிகள் கூறுகையில், நாளை நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தனர்.