பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை அருகே திருவேற்காட்டில் இன்று நடக்கிறது.. இந்த கூட்டத்தில் பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
சமீப காலமாக நடந்து வரும் பாமக கூட்டங்களில், தன்னுடைய வேதனையும், அதிருப்தியும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளிப்படுத்தியே வருகிறார்..
குறிப்பாக, உள்ளாட்சி தேர்தலில் கட்சியினரே துரோகம் செய்து விட்டனர், போட்டியிடுவதற்குக் கூட ஆட்கள் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதே என்று மனம் வெதும்பி பேசி வருகிறார்.
எனவேதான், அன்புமணியை கோட்டையில் உட்கார வைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை மீண்டும் கட்சிக்குள் டாக்டர் ராமதாஸ் ஆழமாக வேரூன்றி வருவதாக தெரிகிறது.
இதற்காக பாமகவை பலப்படுத்த ஒருசில மாற்றங்களை கையில் எடுக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வந்தன. முக்கியமாக தலைவர் பதவிகுறித்தும் பரபரப்பாகப் பேசப்பட்டது..
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பாமகவின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 11.00 மணிக்கு சென்னையை அடுத்த திருவேற்காடு ஜிபிஎன் பேலஸ் திருமண அரங்கத்தில், நடைபெறுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சித் தலைவர் ஜிகே மணி தலைமையேற்கிறார். பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்..
இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சி தலைவராக அன்புமணி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.