சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார்.
மூன்று நாள் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் டி.டி.வி.தினகரன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்த டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “எடப்பாடி பழனிசாமி தற்போது மிகவும் பலவீனமாக இருக்கிறார். அவரிடம் தடுமாற்றமும், பயமும் தெரிகிறது.
அம்மாவின் அ.தி.மு.க-வை மீட்டெடுப்பதே எங்களின் ஒரே நோக்கம். அதற்காகத் தொடங்கப்பட்டது தான் அ.ம.மு.க. விரைவில் ஜனநாயக ரீதியாகத் தேர்தலைச் சந்தித்து அ.தி.மு.க-வை மீட்டெடுப்போம்.
சசிகலா என்னுடைய சித்தி என்பதால் அ.ம.மு.க கூட்டங்களில் கலந்துகொள்ளுங்கள். அ.ம.மு.க கொடியைக் கையில் பிடித்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் என்னால் கூறமுடியாது. அவர் அ.தி.மு.க பொதுச்செயலாளர். எனவே, சசிகலாவின் பாதை வேறு, என்னுடைய பாதை வேறு. ஆனால், எங்களின் இலக்கு ஒன்று தான்” என்றார்.