கொரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்து கொண்டு வரும் சூழ்நிலையில், ஊரடங்கு தொடர்பாக விதிக்கப்பட்டு இருந்த அறிவிப்புகள் அனைத்தையும் தளர்த்தி அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல், அனைத்து கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. அதன் பின்னர், பாதிப்பு சற்று குறைந்ததும், பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளான இறை வணக்கம், விளையாட்டு பாட வகுப்புகள் (பி.இ.டி.) உள்பட சிலவற்றுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டு இருந்தன. தற்போது அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் திரும்ப பெறப்பட்டு விட்டாலும், பள்ளிகளில் இது போன்ற தடைகள் இன்னும் நீக்கப்படாமல் தான் இருக்கிறது.
இது தொடர்பாக சென்னையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது, கேள்விகள் எழுப்பப்பட்டன. அதுபற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது அருகில் இருந்த பள்ளிக்கல்வி துறை ஆணையர் க.நந்தகுமார், அதனை தனது குறிப்பேட்டில் எழுதி கொண்டார்.
இதுகுறித்த ஆலோசனை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் பள்ளிகளில் இறைவணக்கம், விளையாட்டு பாடப்பிரிவு வகுப்புகளுக்கு இருக்கும் தடைகள் நீக்கப்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.