ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து 65 கி.மீ. தொலைவில் கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த ‘சகீன்’ புயல் கரையைக் கடந்ததால் அங்கு பலத்த மழை பெய்தது.
இந்த பலத்த மழை காரணமாக நகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ததால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் வடிய இடமின்றி குளம்போல் தேங்கியது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது. குடியிருப்பு பகுதிகள், கடைகள் உள்ளிட்ட இடங்களிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் சில இடங்களில் வசித்து வந்த பொதுமக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டது. புயல் காரணமாக சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கடல் பகுதியில் வழக்கத்தை விட அலைகள் 5 அடிக்கும் மேல் ஆர்ப்பரித்தது.
மழை காரணமாக மஸ்கட் சர்வதேச விமான நிலையத்திலும் தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக விமான சேவையானது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.