இத்தாலியில் நடைபெற்ற ஜி20 கூட்டமைப்பில் பங்கேற்ற பிரதமர் அங்கிருந்து பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ சென்றடைந்தார். கிளாஸ்கோ நகரில் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பலித்தனர்.
ஜி 20 கூட்டமைப்புக்கு இத்தாலி தலைமை வகிக்கிறது. இதனால் ஜி20 கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்றது.
இம்மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, 2022-ம் ஆண்டுக்குள் இந்தியா 500 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் என்றார். மேலும் இந்தியாவின் ஒரே பூமி, ஒரே சுகாதாரம் கொள்கை கொரோனா பரவல் காலத்தில் உலக நாடுகளுக்கு பேருதவியாக இருந்தது என்றார்.
இதனையடுத்து மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சல் மெர்கல், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லுங், தென்கொரியா பிரதமர் மூன் ஜே இன் உள்ளிட்டோரையும் பிரதமர் மோடி சந்தித்தார். இச்சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி விவாதித்தார். பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
மேலும் வாடிகன் சென்றார் பிரதமர் மோடி. அங்கு போப்பாண்டவர் போப் பிரான்சிஸை பிரதமர் மோடி சந்தித்தார். போப்பாண்டவரை பிரதமர் மோடி முதல் முறையாக சந்தித்து பேசினார். அப்போது, போப்பாண்டவரை இந்தியாவுக்கு வருகை தர வேண்டும் என்றும் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை போப்பாண்டவர் ஏற்றுக் கொண்டார்.
இதன்பின்னர் இத்தாலி பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, பருவநிலை மாநாடு நடைபெறும் கிளாஸ்கோ நகருக்கு சென்றார். அங்கு இந்தியர்கள், பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். கிளாஸ்கோவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை சந்தித்து பேசுகிறார் பிரதமர் மோடி.
கிளாஸ்கோ மாநாட்டில் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவும் பங்கேற்கிறார். கோத்தபாய ராஜபக்சேவின் வருகைக்கு எதிராக உலகத் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.
இம்மாநாட்டில் கோத்தபாய ராஜபக்சேவை பிரதமர் மோடி சந்தித்து பேசுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை. கிளாஸ்கோ மாநாடு இன்றும் நாளையும் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பருவநிலை மாற்றங்கள் தொடர்பாக சர்வதேச நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.