திருப்பூர் தொழில் அமைப்பினர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவைக்கு நேற்று வந்த, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம், துணை தலைவர் பழனிசாமி, செயற்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜூ, செந்தில், இணைச் செயலாளர் செந்தில்குமார், ‘சைமா’ ஈஸ்வரன், ஆடிட்டர் ராமநாதன் ஆகியோர், நிதி அமைச்சரிடம், பஞ்சு, நுால் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளித்தனர்.
ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:
வரலாறு காணாத பஞ்சு, நுால் விலையால், திருப்பூர் பின்னலாடை துறை தத்தளிக்கிறது. மத்திய நிதி அமைச்சரை சந்தித்து, மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளோம். யூக வணிகமே, அபரிமிதமான பஞ்சு விலை உயர்வுக்கு காரணம்.
எனவே, யூக வணிகத்திலிருந்து நீக்கி, அத்தியாவசிய பட்டியலில் பஞ்சை சேர்க்கவேண்டும்;
இதனால், பஞ்சு பதுக்கல் தவிர்க்கப்படும். பஞ்சு ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். உள்நாட்டு தேவைக்குப்போக மீதமாகும் நுாலை மட்டும் ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும்.
குறு, சிறு ஆடை உற்பத்தி நிறுவனங்கள், நிதி நெருக்கடியில் தவிக்கின்றன. எனவே, கொரோனா காலத்தை போல், அவசர கால கடன் வழங்கி கைகொடுக்கவேண்டும் என, நிதி அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தோம்.
தொழிலையும், தொழிலாளர் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, கோரிக்கைகளை மத்திய அரசு நிச்சயம் நிறைவேற்றித்தரும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.சந்திப்பின்போது, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர் செந்தில்வேல் உட்பட பலர் உடனிருந்தனர்.