நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது குறித்து கூறுகையில், ‘தேசிய நலன் சார்ந்த பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதித்து, நாட்டு வளர்ச்சிக்கான வழிகளை கண்டறிய வேண்டும் என குடிமக்கள் விரும்புகின்றனர். அந்தவகையில் நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் அரசு தயாராக இருக்கிறது’ என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது? என்பதே அளவுகோலாக இருக்க வேண்டுமே தவிர, எவ்வாறு சீர்குலைக்கப்படுகிறது என்பது அல்ல என தெரிவித்த மோடி, அரசின் கொள்கைகளுக்கு எதிரான குரல்கள் வலுவாக இருக்க வேண்டும் என்றும், ஆனால் நாடாளுமன்றம் மற்றும் அவைத்தலைவரின் கண்ணியம் பேணப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். புதிய வகை கொரோனா தொற்று குறித்து மக்கள் உஷாராக இருக்குமாறும் அறிவுறுத்தினார்.