நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிபெற்றதை தொடர்ந்து தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு பொறுப்புகளுக்கு வந்திருப்பதால் மக்கள் பணியை மிகுந்த எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும் என்று என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
தவறு செய்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன் என்று வெற்றி பெற்றவுடன் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 7,700 இடங்களில் தி.மு.க.வினர் வெற்றிபெற்றுள்ளனர்.
அவர்கள் வருகிற 2-ந்தேதி பதவி ஏற்கின்ற நிலையில் அதற்கு முன்னதாக உள்ளாட்சி பொறுப்புகளில் எவ்வாறு செயல்பட வேண்டும், மக்கள் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை வழங்க திட்டமிட்டார்.
இதற்கான முதல் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
500-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘மக்கள் நமக்கு தந்திருக்கின்ற பணியை கடமையாக கருதி செயல்பட வேண்டும். புகார்கள் வராத வகையில் மக்கள் பணியாற்ற வேண்டும். 5 ஆண்டுகாலத்தில் எந்த அளவிற்கு உங்கள் பகுதிகளை வளர்ச்சியடைய செய்வதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
மத்திய, மாநில அரசின் நிதியை முறையாக பயன்படுத்தி அடிப்படையான வசதிகளை மக்களுக்கு செய்துதர வேண்டும். இந்த பணியை சேவையாக கருதி ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்’ என்றார்.
இதைத்தொடர்ந்து நாளை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த புதிய உறுப்பினர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அந்த கூட்டத்தில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் கலந்துகொள்கிறார்கள்.