“தி.மு.க.,வின் அற்ப அரசியல் லாபங்களுக்காக, மாணவர்களின் எதிர்காலத்தை பலிகொடுக்க, பா.ஜ., எந்த காலத்திலும் அனுமதிக்காது” என, தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
எப்போதெல்லாம் தமிழகத்தில் தி.மு.க.,வின் அலங்கோல ஆட்சிக்கு எதிராக, பொது மக்கள் கோபக் குரல் எழுப்புகின்றனரோ, அப்போதெல்லாம் தி.மு.க., முன்வைக்கும் மடைமாற்று தந்திரங்கள், ஹிந்தி எதிர்ப்பு மற்றும் ஹிந்து மத எதிர்ப்பு.
மறைந்த கருணாநிதி, முதன்முதலாக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து துவங்கிய, இந்த மடைமாற்று உத்திகளுடன், அர்த்தமற்ற கவர்னர் எதிர்ப்பையும் கூடுதலாக சேர்த்திருக்கிறார், முதல்வர் ஸ்டாலின்.
அவர், திருவண்ணாமலை விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு தொடர்ந்து, மூக்குடைபட்ட தோல்வியை திசை திருப்ப, 2022ம் ஆண்டே நீர்த்து போன துணை வேந்தர் நியமனம் தொடர்பான பிரச்னையை, மீண்டும் ஒரு முறை முன்வைத்திருக்கிறார்.
கடந்த, 1994ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த பல்கலைகளின் வேந்தராக, முதல்வர் இருப்பார் என்ற சட்டத்திற்கு, அன்றைய கவர்னர் சென்னா ரெட்டி ஒப்புதல் அளிக்க மறுத்தார். ‘இந்த சட்டமே தேவையற்றது’ என்றார் கருணாநிதி.
கடந்த 1996ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த உடனே, அப்போது கல்வி அமைச்சராக இருந்த அன்பழகன், ‘முதல்வர் வேந்தரானால், பல்கலைகளின் தன்னாட்சி அதிகாரம் கேள்விக்குறியாகி விடும்.
சுதந்திரமாக செயல்படுவதற்கு குந்தகம் விளைவிக்கும்’ என்று குறிப்பிட்டு, அந்த சட்டத்தை திரும்ப பெற்றார். ஆனால், தி.மு.க.,வின் அரசியல் வரலாறே, இதுபோன்ற அந்தர் பல்டிகளால் ஆனது என்பதால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
புதிய கல்வி கொள்கையின்படி, மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு நுழைவு தேர்வுகள் நடத்தப்படும் என்ற பொய்யான தகவலை, அமைச்சர் பொன்முடி சபையில் பதிவு செய்திருக்கிறார். சட்டசபையில் தமிழக பா.ஜ., — எம்.எல்.ஏ.,க்கள், தி.மு.க., அரசு கொண்டு வந்த சற்றும் பொருத்தமற்ற சட்ட மசோதாவுக்கு, கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து, வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.
தி.மு.க.,வின் அற்ப அரசியல் லாபங்களுக்காக, தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பலி கொடுக்க பா.ஜ., எந்த காலத்திலும் அனுமதிக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.