வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள ‘அசானி’ புயல் நிலத்தை கடக்காமல் திசைமாறி கடலை நோக்கிச் செல்லும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை பரவலாக மழை பெய்துள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டாரத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்தை நிலையில், இரவு பத்து மணிக்கு மேல் சூறவாளியுடன் மழை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்று வீசியதால் பல்வேறு கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. நரசிங்கபுரம், தென்னங்குடிபானையம், தாண்டவராயபுரம், சொக்கநாதபுரம், கல்லாநத்தம் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
இதேபோன்று, சென்னை மாநகரில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. வியாசர்பாடி, சைதாப்பேட்டை, ஆவடி, சேத்துப்பட்டு, அனகாபுத்தூர், மேடவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், புரசைவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் மழை பொழிந்தது. விழுப்புரம் சுற்றுவட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது.
வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்புயலின் தாக்கத்தால், சற்று கோடை வெப்பம் குறைந்திருக்கிறது. கோடை மழை, மக்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.