மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பணியை பாஜக இப்போதே தொடங்கி உள்ளது.
தமிழக பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடந்து முடிந்துள்ளது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை, மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பார்வையாளர்கள், அணி பொறுப்பாளர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை பேசும்போது, ‘தமிழகத்தில் 2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும். அதற்கான பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.
அடிமட்ட அளவில் கட்சியை வலுப்படுத்தவும், புதிய உறுப்பினர்களை சேர்க்கவும், அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கவும், தேர்தல் அறிவிக்கும் வரை காத்திருக்காமல் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து, மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், தமிழகத்துக்கு துறைவாரியாக மத்திய அரசு எவ்வளவு நிதி வழங்கியுள்ளது என்பது குறித்தும் பிரச்சாரம் செய்யுமாறும் நிர்வாகிகளை அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் 38-ல் திமுக கூட்டணியும், தேனியில் அதிமுகவும் வெற்றி பெற்றது. பாஜக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. அதன் பிறகு நடந்த நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் பாஜக தோல்வியடைந்தது.
இதனால் 2024 நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில், 25 தொகுதிகள் வரை வெற்றி பெறும் வகையில் வியூகம் வகுக்க கட்சியினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து பாஜக பொதுச் செயலர் ராம.சீனிவாசன் கூறும்போது, தமிழகத்தின் அரசியல் மையம் மதுரை. மதுரையில் தொடங்கும் எந்த செயலாக இருந்தாலும் கண்டிப்பாக வெற்றி பெறும். அந்த வகையில் 2024 நாடாளுமன்ற தேர்தல் பணியை பாஜக மதுரையில் தொடங்கியுள்ளது. கூட்டணி பற்றி விவாதிக்கவில்லை. தேர்தலின்போதுதான் கூட்டணி அமைத்து போட்டியிடுவதா, தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
கட்சி நிர்வாகிகள் கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைக்காக போராட்டங்களை முன்னெடுத்து செல்வதால் பாஜக மக்களை நெருங்கியுள்ளது. கட்சிக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி தீவிரமாக நடக்கிறது என்றனர்.