தமிழகத்தில் புதிதாக 5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைப்பது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், சென்னை, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, கோவை ஆகிய 5 மாவட்டங்களில் புதிய அலுவலகங்கள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள் அலுவலக கட்டட வளாகத்திலேயே மாவட்ட சிறுபான்மையினர் அலுவலகம் அமைக்க வேண்டும் எனவும், இந்த பணிகளுக்காக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து, சிறுபான்மையினர் நல இயக்குனர் மூலம் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வரவேற்றார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், முதல்வருக்கு சிறுபான்மை மக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி! தமிழக அரசு சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த சிறப்பு திட்டங்களை மாவட்ட அளவில் செயல்படுத்திட ஒரு பொறுப்பு அலுவலர் இல்லாத காரணத்தால் அத்திட்டத்தை செயல்படுத்துவதில் பல சிரமங்கள் ஏற்பட்டன. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மற்றும் மாவட்டபிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரைப் போல் மாவட்ட சிறுபான்மைநல அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று சிறுபான்மை ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்தோம்.
சிறுபான்மை மக்கள் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட முதலமைச்சர் தாயுள்ளத்தோடு எங்கள் கோரிக்கையினை ஏற்று நடப்பு நிதி ஆண்டில் முதல் கட்டமாக ஐந்து மாவட்டங்களுக்கு மாவட்ட சிறுபான்மை நல அலுவலரை ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சம் செலவினத்தில் நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.
இந்த மாவட்ட சிறுபான்மை அலுவலர்கள் முதல் கட்டமாக சென்னை, வேலுர், விழுப்புரம், நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் செயல் படுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஐந்து மாவட்டங்களுக்கு இப்படி விரிவாக்கம் செய்யப்படும். சிறுபான்மைமக்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்த பணி நியமனங்கள் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. காலம் அறிந்து, தேவையறிந்து சிறுபான்மை மக்களுக்காக முதலமைச்சர் செய்த இந்த அருமையான நடவடிக்கைக்காக சிறுபான்மையின மக்கள் நன்றி கடன் பட்டுள்ளனர். இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.