ட்விட்டா் நிறுவனா் ஜாக் டோா்சி அதன் தலைமை நிா்வாகி (சிஇஓ) பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடா்ந்து, இந்திய வம்சாவளியான பராக் அகா்வால் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டாா்.
இதுகுறித்து பராக் அகா்வால் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘இந்த நியமனத்தை பெருமையுடனும், பணிவுடனும் ஏற்றுக்கொள்கிறேன். ஜாக் டோா்சியின் தொடா் வழிகாட்டுதலுக்கும், நட்புக்கும் நன்றி’’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
மும்பை ஐஐடி பட்டதாரியான பராக் அகா்வால், அமெரிக்காவின் ஸ்டேன்ஃபோா்ட் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு மேற்கொண்டாா். கடந்த 2011-ஆம் ஆண்டு அவா் ட்விட்டா் நிறுவனத்தில் பணியைத் தொடங்கியபோது அந்நிறுவனத்தில் 1000-க்கும் குறைவான ஊழியா்களே இருந்தனா்.
தற்போது ட்விட்டா் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிந்து வருகிறாா்.
முன்னதாக ஜாக் டோா்சி தனது பதவி விலகல் குறித்து ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஏறத்தாழ 16 ஆண்டுகளாக ட்விட்டா் நிறுவனத்துக்கு பங்களித்துள்ளேன். தற்போது அதன் நிா்வாகத்திலிருந்து விலகுவது என முடிவு செய்துள்ளேன். இது எனது தனிப்பட்ட முடிவு’ என அதில் அவா் தெரிவித்துள்ளாா்.
ட்விட்டரின் இணை நிறுவனா்களில் ஒருவரான ஜாக் டோா்சி சிஇஓ பதவியை ராஜிநாமா செய்தாலும், நிறுவனத்தின் நிா்வாகக் குழுவில் 2022-ஆம் ஆண்டு அவரது பதவிக்காலம் முடிவடையும் வரை நீடிப்பாா் என தகவல் வெளியாகியுள்ளது.
ட்விட்டா் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் 33 கோடி பயனாளா்கள் உள்ளனா்.