வரும் 2024 லோக்சபா தேர்தலில், டெல்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. காங்., தலைவர் கார்கே, ராகுல் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதிர்ச்சி அடைந்துள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ., அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. இந்த கூட்டணிக்கு ‛ இந்தியா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மாநிலங்களில் வலிமையாக உள்ள கட்சியின் கீழ் தேர்தலை சந்திக்க வேண்டும் என இந்த கூட்டணியின் முக்கிய திட்டமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில், காங்., மூத்த தலைவர் ஆல்கா லம்பா கூறியதாவது:
வரவிருக்கும் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி மேலிடம் அறிவுறுத்தி உள்ளது. டில்லியில் உள்ள மொத்தம் 7 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளோம். தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ளதால், கட்சியினர் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
‛‛இந்தியா” கூட்டணியில் உள்ள போதும், தங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் காங்கிரஸ் எடுத்த முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் கூறுகையில்,
இந்த விவகாரம் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். தேர்தல் கூட்டணி குறித்து, ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரக் குழு மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் கூடி ஆலோசனை நடத்துவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.