ஐரோப்பிய நாடுகளுக்கு 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. நேற்றிரவு தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.
ஜெர்மனி பயணத்தைத் தொடர்ந்து டென்மார்க் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கும் பிரதமர் செல்கிறார். முதலில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில், பிரதமர் ஓலாஃப் ஸ்கால்ஸை சந்திக்கிறார். பின்னர். 6வது இந்தியா – ஜெர்மனி அரசுகளுக்கு இடையிலான இருதரப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.
தொடர்ந்து, 3, 4 ஆம் தேதிகளில் டென்மார்க்கில் அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரெட்ரிக்சனை சந்தித்துப் பேசுகிறார். பின், வட ஐரோப்பிய மற்றும் வடக்கு அட்லாண்டிக் பகுதியில் உள்ள நாடுகள் அங்கம் வகிக்கும் நார்டிக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்கிறார்.
கொரோனாவுக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சி, பருவ நிலை மாற்றம், புத்தாக்கம், தகவல் – தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்டவை குறித்து மாநாட்டின்போது விவாதிக்கப்படவுள்ளது.
இதைத்தொடர்ந்து, பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்துப் பேசவிருக்கிறார். உக்ரைன் – ரஷியா மோதலால் இயற்கை எரிவாயு விநியோகம் பாதிப்பு, உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றம் உள்ளிட்ட பிரச்னைகளை ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வரும் நிலையில், பிரமர் மோடியின் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில், இந்தியாவுக்கும், பிரான்ஸுக்கும் இடையேயான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியை இருவரும் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்தந்த நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல், பேச்சுவார்த்தை என மொத்தம் 25 நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். இதைத்தவிர சர்வதேச தொழில் துறை தலைவர்கள் 50 பேருடன் கலந்துரையாடவுள்ளார்.
வெளிநாடுவாழ் இந்தியர்களையும் மோடி சந்திக்கவுள்ளதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் பிரதமர் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.