சென்னை, அண்ணாசாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், 1.70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள கருணாநிதி உருவ சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இன்று மாலை திறந்து வைக்க உள்ளார்.
மறைந்த தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை அண்ணா சாலையில், ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில், இரண்டு கிரவுண்ட் நிலத்தில், கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த சிலைக்கான பீடம் 12 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. சிலையை சுற்றி மெழுகுப்பூச்சுடன் கூடிய கருங்கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன. சிலைக்கு அஞ்சலி செலுத்த வருவோர் நடந்து செல்ல, கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இப்பணிகளை, தமிழ் வளர்ச்சித் துறைக்கு அரசு ஒதுக்கீடு செய்த, 1.70 கோடி ரூபாய் நிதியில், பொதுப்பணித் துறையினர் செய்து முடித்துள்ளனர்.
கருணாநிதி சிலை திறப்பு விழா, இன்று மாலை 5:30 மணிக்கு நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, திறந்து வைக்க உள்ளார்.சிலை திறப்பு முடிந்த பின், கலைவாணர் அரங்கில் விழா நடக்கிறது. வெங்கையா நாயுடு, ஸ்டாலின் ஆகியோர் பேச உள்ளனர்.