சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களில் வெள்ள நீர் வடிந்த பின்னர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2015-ம் ஆண்டுக்குப் பின்னர் மிக அதிகமான கனமழை கொட்டியது. நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி வெளுத்தது. சென்னையில் இயல்பைவிட கூடுதல் மழை பதிவாகி உள்ளது.
இதனால் சென்னை மாநகரின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு பயன்படுத்த திறந்து வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்திடவும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மின்சார ரயில் சேவைகளும் இன்று பாதிக்கப்பட்டன. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழித்தடத்தில் தண்டவாளத்தில் மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. இதனால் முதலில் ரயில்கள் மிக மெதுவாக இயக்கப்பட்டன. பல இடங்களில் நடுவழியிலேயே ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பரிதவித்தனர்.
பின்னர் காலை 10.30 மணி முதல் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை செல்லும் வழித்தடத்திலும் மழைவெள்ள நீரில் தண்டவாளங்கள் மூழ்கின. இதையடுத்து எழும்பூர்- கடற்கரை இடையேயும் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
அத்துடன் கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டிய ரயில்கள் கடற்கரை ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த ரயில்கள், எழும்பூர் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனிடையே சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் இரவு தெரிவித்துள்ளது. மேலும் வரும் 10,11 தேதிகளில் சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கையும் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.