சென்னையில் குற்றச்சம்பவங்கள் நேரிடும்போது திறம்பட பணியாற்றி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் போலீசாருக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு மாதந்தோறும் ‘ நட்சத்திர காவலர்’ விருது வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை போலீஸ்துறையில் சிறப்பாக மற்றும் மெச்சத்தக்க வகையில் பணியாற்றும் போலீசாரை கூடுதல் போலீஸ் கமிஷனர் (தலைமையிடம்) தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு மாதமும் கண்டறிந்து அவர்களது பணியை மதிப்பிட்டு ‘மாதத்தின் நட்சத்திர காவலர்’ என்ற விருது வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் போலீசாருக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதி, தனிப்பட்ட செயல்திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும். இந்த விருது மாதந்தோறும் 5-ந்தேதி வழங்கப்படும். எனவே போலீசார் மெச்சத்தக்க வகையில் பணியாற்றி அதன் விபரத்தை தங்கள் துணை கமிஷனர் மூலமாக கூடுதல் போலீஸ் கமிஷனருக்கு தெரியப்படுத்தலாம். ‘மாதத்தின் நட்சத்திர காவலர்’ விருதை பெறும் வகையில் போலீசார் தங்களது பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.