காவிரி டெல்டாவில் மீண்டும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் பேரழிவு திட்டமா? திருவாரூரில் தேர்தல் பிரச்சாரம் துவக்கமா?
– பிஆர் பாண்டியன் கண்டனம்!

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் 2019, 2021 பாராளுமன்ற சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் போராட்ட பந்தலில் துவக்கினார். குறிப்பாக திருவாரூர் அருகே திருக்காரவாசல் கோடியக்காடு வேதாந்தாவிற்கு வழங்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்ட பந்தலில் தனது பிரசாரத்தை துவக்கினார்.

அப்போது காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுகளை சீரமைப்பதற்கான குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்நம்பினோம் காத்திருந்தோம்.
திமுக ஆட்சி பொறுப்பேற்று 2022ல் சுல்தான் இஸ்மாயில் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆறு மாத காலத்திற்குள்ளாக ஆய்வு செய்து ஆய்வு அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இது நாள் வரையிலும் ஆய்வு அறிக்கையை திமுக அரசு வெளியிடாமல் மூடி மறைத்துள்ளது. இச்செயல் மூலம் மீண்டும் பேரழிவு திட்டங்களை காவிரி டெல்டாவில் துவங்குவதற்கு கார்ப்ரேட் நிறுவனங்களை அனுமதிப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை திமுக அரசு மேற்கொண்டு வருகிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக காவிரி டெல்டாவை சேர்ந்த அமைச்சர் ஒருவர் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நிலக்கரி, எடுப்பதை தடுக்க இயலாது, இது காலத்தின் கட்டாயம் என்று தெரிவிக்கிறார்.
இதன் மூலம் மீண்டும் பேரழிவு திட்டங்கள் காவிரி டெல்டாவில் நிறைவேற்றப்படும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு முரணாக அதனை ஒழிப்பு நோக்கோடு மன்னார்குடி அருகே ஆலங்கோட்டையில் சிப்காட் மூலம் ஜவுளி பூங்கா அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. படிப்படியாக அப்பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் அபகரிக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பறிபோய் பாலைவனமாக மாறும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தை திருவாரூரில் துவங்க உள்ள முதலமைச்சரும், திமுக தலைவருமான
மு க ஸ்டாலின் இது குறித்து விளக்கம் அளிக்க முன்வர வேண்டும்.

தமிழக விவசாயிகளின் முகவரியை அழித்து வாழ்வாதாரத்தை அளிக்கும் உள்நோக்கத்தோடு விளைநிலங்களை அபகரிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் -2023 திரும்ப பெறப்படுமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் பட்டா நிலங்கள், கோவில் குத்தகை, அறக்கட்டளை, ஆதீன நிலங்கள், இனாம் நிலங்கள் உள்ளிட்ட அனைத்தையும் அபகரித்து கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுகிற நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி மூலம் கடல்
முகத்துவார நதிகள் சீரமைப்பு திட்டம் மூலம் முதல் கட்ட நிதி 2016ல் பெறப்பட்டு 1200 கோடி ரூபாயில் அதிமுக ஆட்சி காலத்தில் அரிச்சந்திரா அடப்பாறு,
வளவனாறு, பாண்டவையாறு உள்ளிட்ட ஐந்து நதிகள் 2021 ல் சீரமைக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது கட்ட நிதியின் மூலம் கோரையாறு, பாமணி ஆறு, முள்ளியாறு உள்ளிட்ட 6 நதிகள் சீரமைக்கப்பட வேண்டும். இதற்கான நிதி உதவியை பெறாமல் முதலமைச்சர் காலம் கடந்தி விட்டார். இதனால் மிகப்பெரிய பாசன வடிகால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது,

நெல் கொள்முதல் தமிழகம் முழுமையிலும் தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டது. திருக்குவளையில் போராட்டம் நடத்தி அரசாணை தீயிட்டு கொளுத்திய பிறகு பிறகு காவிரி டெல்டா தவிர்த்து தமிழ்நாடு முழுவதும் தனியார் அனுமதிக்கப்பட்டுள்ளது, மீண்டும் காவிரி டெல்டாவில் தனியார் கொள்முதலை
திமுக அரசு நிறைவேற்றுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.

மேலும் 2021 திமுக தேர்தல் அறிக்கையில்
வெளியிடப்பட்ட அறிவிப்புகளான விவசாயிகளுக்கான தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கடன் தள்ளுபடி செய்து அதற்கான நிதியை தமிழக அரசே ஈடு செய்யும் என ஒப்புதல் அளித்தார்.

கிராமங்கள் தோறும் விவசாய இடுபொருட்கள் குறைந்த விலையில் வாகனங்கள் மூலம் விவசாயின் வீடுகளுக்கு சென்று விநியோகம் செய்யப்படும்.

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

கிராமப்புற மாணவர்களின் கல்வி நலன் கருதி கல்விக் கடன் ரத்து செய்யப்படும்.

ஆயிரம் இடங்களில் தடுப்பணைகள் அமைத்து உபரி நீரை தடுத்து பாசனத்துக்கு பயன்படுத்துவோம்.

அணைகளின் நீர் கொள்ளளவை உயர்த்துவதற்கு தூர்வாரி கரைகள் பலப்படுத்தப்படும்.

கேரளாவில் உள்ளது போல் அனைத்து
தோட்டக்கலை வேளாண் விளை பொருட்களுக்கும் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் உத்தரவாதம் செய்யப்படும்.

உழவர்கள் உற்பத்தி செய்யும் வாழை மஞ்சள் மரவள்ளிக்கிழங்கு பருப்பு வகை மிளகாய் சிறுதானியங்கள் தேயிலை எண்ணெய் வித்துக்கள் தோட்டக்கலை பொருட்கள் ஆகிய அனைத்து விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும்.

ஊரகப் பகுதிகளில் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான சந்தைகள் அமைக்கப்படும்.

கரும்பு விவசாயிகளுக்கு தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை குறிப்பிட்ட கால வரையறைக்குள் பெற்றுத் தரப்படும்.திருமணகுடி சர்க்கரை ஆலை பிரச்சனை குறித்து தீர்க்கப்படும் என அறிவித்தார்கள்.

மாறாக அதிகார வர்க்கம் ஆலையையே விலைக்கு வாங்கி மதுபான உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயிகள் 1300 நாட்களைக் கடந்து போராடி வருகிறார்கள். முதலமைச்சர் கண்டுகொள்ள மறுக்கிறார்.

காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மீத்தேன் ஷேல் கேஸ் போன்ற பேரழிவு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தால் அவற்றை திமுக அரசு தடுத்து நிறுத்தும் என்றார்கள். மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கவில்லை.ஆனால் தமிழக அரசு ஓ என்ஜிசிக்கு துணை போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படாது தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். ஆனால் மாற்றாக தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 கொண்டு வந்து ஒட்டுமொத்த விவசாயிகள் நிலங்கள் மட்டுமன்றி குடியிருப்பு மனைகள், ஆறுகள்,ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகளை அபகரிக்க சட்டம் கொண்டு வந்துள்ளனர்.

இயற்கை பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகளை பாதுகாப்பதற்கு அரசுக்கு பரிந்துரை வழங்க விவசாயிகள் அதிகாரிகள் சுற்றுச்சூழல் கொண்ட வேளாண் மண்டல குழுக்கள் அமைக்கப்படும் .

ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானிய சேமிப்புக் கிடங்கள் அமைக்கப்படும் இவை உலர் களங்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்கள் இணைக்கப்படும்.

மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

அரசு நிறுவனங்களின் உணவு விடுதிகள், ஆய்வுக்கான பால் பழங்கள் காய்கறிகள் வெள்ளம் பனைவெல்லம் சர்க்கரை பருப்பு வகை தானிய வகை ஆகியவற்றை கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலமாக கொள்முதல் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் .

பனைவெல்லத்தை மாவட்ட வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்து நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கொப்பரை தேங்காய் தமிழக அரசே செய்து தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்து நியாய விலை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாறாக பாமாயில் விற்பனை தடுக்கப்படும்.

உழவர்களுக்கு கிலோ ஒன்றுக்கு பத்து ரூபாய் மானியத்தில் விதைகள் வழங்கப்படும்.

கடலூர் மாவட்டத்தில் அரிவாள்மூக்கு வடிகால் திட்டம் போர்க்கால அடிப்படை நிறைவேற்றப்படும் என்ற எந்த ஒரு வாக்குறுதிகளையும் நிறைவேற்றாத திமுக அரசு இன்று மீண்டும் விவசாயிகளிடம் வாக்கு கேட்க முயற்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பதை முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.

தற்போது திமுக அரசு கொடுத்திருக்கிற வாக்குறுதிகள் எதனையும் விவசாயி நம்ப தயாராக இல்லை குறிப்பாக கடன் தள்ளுபடி குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. எனவேதான் விவசாயி திமுகவிற்கு வாக்களிக்க விரும்பவில்லை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளோம்.

முதலமைச்சர் பொறுப்பேற்று 5 ஆண்டு காலமாக காவிரி குறித்த வார்த்தையே சொல்ல விரும்பவில்லை. மேகதாட்டு அணை கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்ததின் அடிப்படையில் கர்நாடக அரசு எடுக்கும் முயற்சிக்கு மறு சீராய்வு மனு தாக்கல் என்கிற பெயரில் மௌனம் காப்பது ஏன்? மறுசீராய்வு மனு விசாரணைக்கு கொண்டு வர முயற்சிக்காதது ஏன்? கர்நாடக அரசின் செயல்பாட்டிற்கு இதுவரையிலும் முதலமைச்சர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? இது குறித்து விளக்கம் அளிக்காமல் விவசாயிகளிடம் வாக்கு கேட்பதற்கு திமுகவிற்கு தகுதி இல்லை. மாறாக காவிரி டெல்டாவில் விளைநிலங்களை அபகரித்து பேரழிவு திட்டங்களுக்கு அனுமதிப்பதற்கு துணை போகிறீர்களோ? என அஞ்ச தோன்றுகிறது.

நாகை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வேளாண் தொழில் நிறுவன பெருவழி சாலை என அறிவித்துவிட்டு அதற்கான எந்தத் திட்டமும் துவங்கவில்லை.

எனவே தற்போது 2026 தேர்தல் பிரச்சாரம் பயணத்தை துவங்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேர்தல் அறிக்கை நிறைவேற்றாதது, விவசாயிகள் விரோத கொள்கை செயல்பாடு குறித்து உரிய விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேற்கண்டவாறு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பி ஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *