காவிரி டெல்டாவில் தூர்வாரும்
பணிகளுக்கு நிரந்தர அரசாணை வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சருக்கு பி.ஆர் .பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பிஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
காவிரி டெல்டாவில் தூர்வாருவதற்கு ரூபாய் 80 கோடி ஒதுக்கீடு செய்து மே மாதம் தூர்வாரும் பணி துவங்கியதை வரவேற்கிறோம்.பணிகளை விரைவு படுத்தி விவசாயிகள் துணிவுடன் குறுவை சாகுபடி பணிகள் துவங்குவதற்கு முதலமைச்சரே நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதை வரவேற்கிறோம்.
தொடர்ந்து பாசன கட்டுமானங்களை சீரமைப்பதற்கு கூடுதல் நிதிகளை ஒதுக்கீடு செய்து.பராமரிப்பு தலைப்பின்கீழ் பிப்ரவரி மாதமே பராமரிப்பு பணிகள் மேற்க்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் சட்டப்பேரவை பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணியை துவங்குவதில் ஏற்படுகிற காலதாமதத்தை போக்கி,தூர்வாருவதை கட்டாயமாக்கி நிரந்தரப்படுத்திடும் வகையில் நிரந்தர அரசாணை வழங்கி பிப்ரவரி மாதமே தூர்வாரும் பணிகளை துவங்கிட முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
கிராமங்களில் ஏரிகள் நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் நீர்நிலைகளை நிரப்புவதற்கு முன்னுரிமை கொடுத்து தண்ணீர் பங்கீட்டை செயல்படுத்த வேண்டும் இருக்கும் தண்ணீரை கொண்டு சம்பா சாகுபடி பணிகளை துவங்கும் வகையில் சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
விதை தரமாக கிடைப்பதை உறுதிப்படுத்துவதோடு, வெளிச்சந்தையில் டிஏபி யூரியா போன்ற உரங்கள் தட்டுப்பாட்டை உருவாக்கி ஒரு மூட்டை யூரியா உடன் 250 ரூபாய் மதிப்புள்ள நானோ யூரியாவும் வாங்கினால்தான் யூரியா கொடுக்கமுடியும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள் நானோ யூரியா பயன்படுத்துவதை தமிழக அரசு கொள்கை பூர்வமாக ஏற்று கொண்டாள் அதனை விவசாயிகளுக்கு பயன்படுத்துவதற்கு உரிய வழிகாட்டு முறைகளை உருவாக்க வேண்டும். மாறாக சூர்யாவுடன் தனியார் வியாபாரிகள் நானோ யூரியாவும் பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது மூட்டை ஒன்றுக்கு௹250 ரூபாய் கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக உர உற்பத்தி நிறுவனங்கள் இந்த நிபந்தனைகளை விதித்து ஏற்றுக் கொள்ளும் வணிகர்களுக்கு மட்டுமே உரங்களை விநியோகம் செய்கிறார்கள். மறுக்கும் நிறுவனங்களுக்கு உர விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்
எனவே தமிழக அரசு கூட்டுறவு அமைப்புகள் மூலம் முன்னுரிமை கொடுத்து உரம் ஒதுக்கீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.
தமிழகத்தில் மணல் விற்பனை குறித்து வெளிப்படையான நடவடிக்கைக்கு முன்வரவேண்டும். நடுத்தர மக்கள் தனக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு நிர்ணயிக்கும் விலையில் மணல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். உயர் நீதிமன்றம் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் குவாரிகள் அமைத்து அனுமதிக்கப்பட்ட அளவில் மணல்விற்பனை செய்வதை அரசு கண்டிப்புடன் கண்காணிக்க வேண்டும்.கட்டுப்பாடற்ற விலை உயர்வால் ஒரு லோடு மணல் திருவாரூர் மாவட்டத்தில் 67 ஆயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. பாரபட்சமில்லாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் அரசு நிர்ணயிக்கும் விலையில் மணல் கிடைப்பதை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
கட்டுப்பாடற்ற மணல விலை உயர்வாலும் தட்டுப்பாட்டாலும் நடுத்தர பகுதி மக்கள் வீடுகள் கட்டுவது பாதியிலேயே நிற்கிறது. கட்டுமானப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
இதனை உணர்ந்து நடவடிக்கை எடுப்பதோடு,வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் மணல் உள்ளிட்ட கனிம பொருட்கள் கடத்தப்படுவதை இரும்புக்கரம் கொண்டு தடுத்து நிறுத்த முன்வரவேண்டும்.
குறிப்பாக நெல்லை கன்னியாகுமரி மாவட்டங்கள் வழியாக மலை வளங்கள் அழிக்கப்பட்டு கருங்கற்கள் கனிம வளங்கள், மணல் ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் அன்றாடம் கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுகிறது. இதனை நிரந்தரமாக தடை விதித்து இயற்கை வளங்களை பாதுகாக்க தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றார்.