தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பிஆர்.பாண்டியனை
பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சுப்ரமணியன், கதிரேசன், கணபதி உள்ளிட்டோர் மன்னார்குடியில்
நேரில் சந்தித்து பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பி ஆர் பாண்டியன் தெரிவித்ததாவது:
காவிரி டெல்டாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு கணக்கெடுப்பு என்கிற பெயரில் காலதாமதப்படுத்துவது ஏற்க இயலாது. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனை இன்றி இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும்.
வேளாண் துறையில் தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல பிரிவுகளை ஒன்றிணைத்து செயல்படுத்துவது குறித்து வெளியிடப்பட்ட அரசாணை குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
உரத்தட்டுப்பாடு தீவிரம் அடைந்து இருக்கிறது. தேவையான டிஏபி, யூரியா, பொட்டாஷ் போன்ற உரங்கள் உடனடியாக தடையின்றி கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக தொடர்ந்து தீவிரமான போராட்டத்தில் அப்பகுதி விவசாயிகள், தொழிலாளர்கள் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.சட்ட விரோதமாக 4000 ஏக்கர் பரப்பிலான ஏரிகளை அகபகரிப்பதற்கு தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 மூலம் விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிது. இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வரும் ஜனவரி 5ஆம் தேதி மறு விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். விவசாயிகள் மறுப்பு தெரிவித்தால் நிலத்திற்கான தொகை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு நிலம் அத்துமீறி கையகப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாவட்ட ஆட்சியரின் செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஆகும்.
தமிழ்நாடு அரசின் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகள் குறித்து மறுபரிசீலனை செய்ய முன்வர வேண்டும்.
போராடும் விவசாயிகளை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்த முயற்சிப்பது ஏற்க முடியாது. தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளும் நடவடிக்கைகளும் தீவிரமடைந்து வரும் நிலையில் இதுகுறித்து அவசர கலந்தாலோசனை செய்வதற்காக வரும் டிசம்பர் 26 ஆம் தேதி சம்யுத்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) தேசிய ஒருங்கிணைப்பாளர் பஞ்சாப் ஜக்தீப் சிங் தல்லேவால், ஹரியானா அபிமன்யு கொஹார், கர்நாடக சாந்தகுமார் உள்ளிட்ட தலைவர்கள் மன்னார்குடி வருகை தர உள்ளார்கள், அவர்களுடனான ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசின் விவசாயிகள் மீதான தாக்குதல்கள் குறித்து தேசிய அளவிலான போராட்டங்களை நடத்துவது குறித்த நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றார்.