கள்ளக்குறிச்சி சக்தி பள்ளிக் கலவரம் உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி ஓரிரு நாட்களில் தீர்வுகாண பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்ன சேலம் சக்தி தனியார் பள்ளியில் நடைபெற்ற கலவரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது.இது ஏதோ திட்டமிட்டு உள்நோக்கத்தோடு தூண்டுவிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல்களாகவே தெரிய வருகிறது. மாணவி ஸ்ரீமதி இறந்து நான்கு தினங்கள் கடந்த நிலையில் இப் போராட்டம் தீவிரமடைவது குறித்து காவல்துறையின் உளவு பிரிவு ஆய்வுகள் மேற்கொண்டதா? மாவட்ட நிர்வாகம் இது குறித்து தொடர் நடவடிக்கை எடுத்ததா? சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் கொடுத்த புகார் மனு மீது ஏன் உடனடியாக உரிய வழக்கு பதிவு செய்து பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்படவில்லை? மாணவி கொலையா? இல்லை தற்கொலையா? என்பதை விசாரித்து உண்மையை வெளி உலகத்துக்கு தெரிவிக்க மாவட்ட நிர்வாகம்  அவசரம் காட்டாதது ஏன்?

இப்படிப்பட்ட சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.அரசு அதற்கு உடனடி தீர்வு காணாதால்தான் இப்படிப்பட்ட பெரும் விளைவுகள் ஏற்பட காரணமாக உள்ளது.

தமிழக அரசு இதன் மீது உரிய கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இரண்டு தினங்களாகவே இந்த கலவரம் நடப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கள்ளக்குறிச்சி நகரத்தில் இருக்கிற முக்கிய பிரமுகர்களும், பள்ளி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் தகவல் தந்ததாகவும் குறிப்பிடுகிறார்கள்.

இந்த கலவரம் நடக்கப் போவதாக முன்கூட்டியே அறிந்த கல்வி நிலைய தாளாளர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம்  நேரடியாக முறையிட்டதாகவும், தங்கள் பள்ளியின் மீது மாணவியின் பெற்றோர்களுக்கு சந்தேகம் இருக்குமேயானால் உடனடியாக வழக்கு போட்டு கைது செய்யுங்கள் என்று மன்றாடியதாகவும்.
5000 மாணவ, மாணவியர்கள் எங்கள் பள்ளியில் படித்து வருவதால் அவர்களுடைய கல்வி பாதுகாப்பு தான் முக்கியமானது. எனவே பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து முன்கூட்டியே தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க மன்றாடியதாகவும் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
இதற்கு மாவட்ட காவல்துறை ஆதாரம் இல்லை என்று மறுத்ததாகவும் தெரிவிக்கிறார்கள்.ஏன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை?

காவல்துறை உளவு பிரிவு இதுகுறித்து ஏன் தகவல் அளிக்க முன் வரவில்லை? அப்படி என்றால் காவல்துறை தமிழகத்தில் முற்றிலும் செயல் இழந்து உள்ளதா? உளவுப் பிரிவு முடங்கி விட்டதா? என்பதை எல்லாம் தமிழக முதலமைச்சர் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய தேவையும், நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.

இந்த கலவரம் என்பது தமிழகத்திற்கு புதுமையானது.இப்படி ஒரு கலவரத்தை வட மாநிலங்களில் கண்டிருக்கிறோம், வெளிநாடுகளில் கண்டிருக்கிறோம். தமிழகத்தில் இதுவே முதலாவதான கலவரமாக மாறி இருக்கிறது.

உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் கவனக்குறைவாக செயல்பட்ட மாவட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்து மாணவியின் சாவுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.அந்த குடும்பத்திற்கு உரிய நிதி உதவி வழங்கிட வேண்டும்.

இந்த கலவரத்திற்கு அடிப்படையானவர்களை கண்டறிந்து உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்துவதோடு, உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.

அரசியல்
காழ்புணர்ச்சியால் கலவரம் நடந்திருக்குமேயானால் அவர்களை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதே நிலை
தொடருமேயானால் தமிழகத்தில் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும். சகோதரத்துவத்தோடு
தமிழர் என்ற உணர்வோடு அமைதியாக வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் பல்வேறு பிளவுகளை இது மாதிரியான சம்பவங்கள் உருவாக்கி விடும். எனவே உண்மை தன்மையை கண்டறிந்து வெளிப்படையான நடவடிக்கை எடுப்பது தமிழகத்தின் இன்றைய அவசிய தேவையாக எதிர்பார்க்கிறோம்.

மேலும்பள்ளி  மாணவ மாணவியர் இடத்தில் அரசியல் கொள்கை வேறுபாடுகளை உருவாக்கும் கருத்துக்கள் பரிமாறுவதும்,அரசியல் சார்புடைய நிகழ்வுகளை பள்ளிகளில் நடத்த அனுமதிப்பதும் கடும் சட்ட விதிகளின் மூலம் தடுத்து நிறுத்திடவேண்டும். அதனை கண்டிப்புடன் பின்பற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டும்.

அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் கூட பள்ளி நிகழ்ச்சிகளில் முரண்பட்ட கருத்துக்களை ஒருவருக்கொருவர் மேடைகளில் ஒளி பெருக்கியிலேயே பகிர்ந்து கொள்ளும் நிகழ்வுகள் சமீப காலமாக எழுந்துள்ளது ஏற்புடையது அல்ல. அரசியல் வேறு கல்வி வேறு என்கிற கொள்கை நிலைப்பாட்டுடன் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டிய அவசியமும் தேவையையும் இச்சம்பவம் உணர்த்துகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழக அரசு இனி பள்ளி கல்லூரிகள் பாதுகாப்பு செயல்பாடு குறித்தான கண்காணிப்புகளை தீவிரப் படுத்துவதோடு, அதனை கண்டித்துடன் பின்பற்றுவதற்கான தேவையான சட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

மேலும் அப்பள்ளியில் பயின்று வரும் மற்ற மாணவ மாணவர்களுக்கான கல்வியை உடன் தொடர்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அவசரகால நடவடிக்கையாக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அவர்கள் கல்வி கற்பதில் எந்த பாதிப்பும், இடைவெளியும் ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்வது தமிழக அரசின் கடமையாக உணர வேண்டும்.

மேற்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons