நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர்கள் நேற்று புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.
உலகக் கோப்பையின் நேற்றைய போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தப் இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம், உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
மேலும், சிறப்பாக பேட்டிங் செய்த இந்திய வீரர்கள் விராட் கோலி 95, ரோகித் 46 ரன்கள் எடுத்தனர்.
இந்தப் போட்டியில் 4 சிக்ஸர்கள் அடித்த ரோகித் சர்மா, ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸை பின்னுக்கு தள்ளி இரண்டாவது இடம்(40 சிக்ஸர்கள்) பிடித்தார். முதல் இடத்தில் மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெயில்(49 சிக்ஸர்கள்) உள்ளார். வரும் போட்டிகளில் ரோகித் சர்மாவின் அதிரடி தொடரும் பட்சத்தில் கெயிலின் சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
மேலும், ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் இலங்கையின் ஜெயசூர்யாவை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்துக்கு விராட் கோலி(13,437 ரன்கள்) முன்னேறியுள்ளார். முதல் மூன்று இடங்களில் சச்சின், சங்ககாரா, ரிக்கி பாண்டிங் ஆகியோர் உள்ளனர்.
அதேபோல், இந்திய வீரர் சுப்மன் கில் குறைந்த போட்டிகளில்(38) இரண்டாயிரம் ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.