ரஷிய தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்கும் பணியை ஒருங்கிணைப்பதற்காக ஹங்கேரி சென்ற மத்திய அமைச்சா் ஹர்தீப் சிங் புரி மீட்புப் பணியை நிறைவு செய்துவிட்டு இன்று இந்திய மாணவர்களுடன் டெல்லி திரும்பினார்.
புத்தபெஸ்ட் பகுதியில் சிக்கியிருந்த மாணவர்களின் கடைசி குழுவினருடன் இன்று காலை அவர் டெல்லி வந்தடைந்தார்.
டெல்லி வந்த இந்திய மாணவர்கள், பாதுகாப்பாக அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்று பெற்றோரை சந்திப்பது குறித்து மத்திய அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் சிக்கியிருந்த 16,000 இந்திய மாணவர்கள் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டனர்.
கார்கீவ் மற்றும் சுமி நகரங்களைத் தவிர்த்து, உக்ரைனின் மற்ற அனைத்து நகரங்களிலிருந்தும் இந்திய மாணவர்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டுவிட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து, தனது வான்வெளிப் பாதைகளுக்குத் தடை விதிப்பதாக உக்ரைன் அறிவித்தது. அதன் காரணமாக, அங்கு மருத்துவம் உள்ளிட்ட உயா்கல்வி படித்துவந்த இந்திய மாணவா்கள் உள்பட 20,000-க்கும் அதிகமான இந்தியா்கள், அந் நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனா்.
அவா்களை மீட்பதற்காக, ‘ஆபரேஷன் கங்கா’ என்ற திட்டத்தை அறிவித்த மத்திய அரசு, இந்தியாவிலிருந்து போலந்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாகியா உள்ளிட்ட உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி மீட்பு பணியை மேற்கொண்டு வருகிறது. இந்த மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக, மத்திய அமைச்சா்கள் கிரண் ரிஜிஜு, வி.கே.சிங், ஹா்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோரை சிறப்பு தூதா்களாக உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு இந்தியா அனுப்பியது.
அதன்படி, ஸ்லோவாகியா சென்ற மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு, ஒருங்கிணைப்புப் பணியை நிறைவு செய்துவிட்டு இந்தியா திரும்பிய நிலையில், இன்று காலை ஹர்தீப் சிங் புரி டெல்லி திரும்பியுள்ளார்.