சென்னை புரசைவாக்கத்தில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் எடப்பாடி பழனிசாமி தரப்பை கடுமையாக விமர்சித்துப் பேசினர்.

கூட்டத்தில் முதலில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரால் கட்டிக்காக்கப்பட்ட அதிமுக, தற்போது தவறான தலைமை வசம் சிக்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். அண்ணா தி.மு.க என்ற பூமாலை தற்போது ஒரு குரங்கின் கையில் சிக்கியுள்ளது என எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்தார்.எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் இருக்கும் வரை தாங்கள் மீண்டும் இணையப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

ஓ.பி.எஸ் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் பின்னால் அணிவகுக்கத் தயாராக இருப்பதாக அவர் கூறினார். வைத்திலிங்கத்தின் கருத்துக்களை வழிமொழிந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அ.தி.மு.க சந்தித்த சரிவுகளைப் பட்டியலிட்டார். சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலில் 7 தொகுதிகளில் (42 சட்டமன்றத் தொகுதிகள்) அ.தி.மு.க. டெபாசிட் இழந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு சந்தித்த 11 தேர்தல்களிலும் அ.தி.மு.க. தோல்வியையே தழுவியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஒற்றைத் தலைமை வந்தால் வெற்றி நிச்சயம் என்ற மாயையை உருவாக்கி, கட்சியைப் படுபாதாளத்திற்குத் தள்ளிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.கட்சியின் தற்போதைய நிலையைக் கண்டு உண்மையான தொண்டர்கள் மனவேதனையில் இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு வரும் காலங்களில் உரிய பாடம் புகட்டப்படும் என்றும் எச்சரித்தார்.

எடப்பாடி பழனிசாமி இல்லாத அ.தி.மு.க.வுடன் ஒன்றிணைவோம், ஆனால் அவர் இருக்கும் வரை அதிமுகவில் இணையப் போவதில்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் வாயிலாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வை வீழ்த்துவதே தங்களின் இலக்கு என்பதையும், ஒருங்கிணைந்த அ.தி.மு.க அமைந்தாலும் அதில் இ.பி.எஸ்-க்கு இடமில்லை என்பதையும் ஓ.பி.எஸ் அணி தெளிவுபடுத்தி உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *