தமிழக ஆளுநர் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களைத்திருப்பி அனுப்பியிருந்த நிலையில், இன்று சட்டப்பேரவை கூடியது. இன்று கூடிய சிறப்புச் சட்டப்பேரவை கூட்டத்தில் தனி தீர்மானத்தை முன்மொழிந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
அவரது உரையில், ”மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை என்கிறார் புரட்சியாளர் மாசேதுங்.
காய்ச்சல், தொண்டை வலி காரணமாக சில நாட்கள் வீட்டில் நான் ஓய்வெடுத்து வந்தாலும் எனது உடல் நலனை விட இந்த மாநிலத்தின் மக்களின் நலன், தாய் நாட்டின் நூற்றாண்டு கண்ட மாண்புமிகு சட்டப்பேரவை நலன்தான் அதை விட முக்கியம் என்ற மன உறுதியோடு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.
கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நம்மை இந்திய அரசியல் சட்டம் வழங்கிய அதிகாரத்தின் மூலம் சட்டம் இயற்றும் இந்த சட்டமன்றத்தை தடுக்கும் சக்தி ஒன்று நுழைந்துள்ளது. ஆனால் இந்த சூழ்நிலை என்பது இந்திய ஜனநாயகத்தின் மீதும் மிக மோசமான வகையில் செலுத்தி விடும் என்ற அச்சத்தில்தான் உங்கள் முன்னால் நிற்கிறேன்.
இங்கே படமாக மட்டுமல்ல பாடமாக நின்று கொண்டிருக்கிறார் வான்புகழ் வள்ளுவர். ‘முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்’ என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதியுள்ளார்.
நீதி நெறியுடன் அரசை நடத்தி, மக்களை காப்பாற்றும் ஆட்சியாளர்தான் மக்களுக்கு தலைவன் என போற்றப்படுபவன் என்று அதற்கு உரை எழுதினார் எங்களை எல்லாம் ஆளாக்கிய கலைஞர். அவரின்வழியில் ஆட்சி நடத்தி வருகிறோம்.
இந்தியாவில் மக்களாட்சி மாண்பை காப்பாற்றும் சட்டமன்றமாக, முதன்முதலாக இருந்த சட்டமன்றம் நமது தமிழ்நாடு சட்டமன்றம்.
இந்திய விடுதலைக்கு முன்பும் பின்புமாக ஒரு நூற்றாண்டு காலமாக, பல கட்சிகள், பல முதலமைச்சர்கள், பல நூறு உறுப்பினர்களைக் கண்டது தமிழ்நாடு சட்டமன்றம்.
ஜனநாயக விழுமியங்களைப் போற்றிப் பாதுகாத்து வைப்பதுடன், சமூகநீதி அடிப்படையில் சமூக நலத்திட்டங்களை அனைத்து தரப்பு மக்களின் நலன் கருதி செயல்படுத்துவதில் ஒன்றியத்திற்கே முன்னோடியாக திகழ்ந்து வருவது என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில் தமிழக ஆளுநர், தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பி வைத்துள்ளது தமிழ்நாட்டு மக்களையும் இந்த சட்டமன்றத்தையும் ஆளுநர் அவமதிக்கிறார் என்றுதான் பொருள்.
10க்கும் மேற்பட்ட மசோதாக்களின் கோப்புகளுக்கு அவர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்டவிரோதமாகும்; ஜனநாயக விரோதமாகும்; மக்கள் விரோதமாகும்; மனசாட்சி விரோதமாகும். அனைத்துக்கும் மேலாக இந்த சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானதாகும்.
ஆளுநராக இருப்பவர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
ஒன்றிய அரசிடம் அவருக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை வாங்கித்தருவதற்கு முயற்சிக்கலாம்.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய நிதியை வாங்கித் தரலாம். புதிய ரயில்வே திட்டங்களை பெற்றுத் தரலாம். மாநில ஆட்சிக்கும் ஒன்றிய அரசுக்கும் பாலமாக இருக்கலாம். ஆனால் இதில் எதையும் செய்யாமல் மாநில அரசின் திட்டங்களுக்கு எவ்வாறு முட்டுக்கட்டை போடலாம் என நாள்தோறும் யோசித்து யோசித்து செயல்பட்டு வருகிறார்.
அதோடு தினந்தோறும் யாரையாவது கூட்டி வைத்துக்கொண்டு அவர் வகுப்பு எடுக்கிறார். வகுப்பு எடுக்கட்டும் தவறில்லை. அதில் மொத்தமும் தவறான பாடங்களையே சொல்லித் தந்து கொண்டிருக்கிறார்.
விழாக்களுக்கு செல்கிறார். செல்லட்டும், ஆனால் விதண்டாவாதமாக கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆளுநர் பதவி என்பது அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும். அது இருக்கும்வரை மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கி இருப்பதுதான் ஆளுநர் பதவியின் மரபாகும்.
உச்சநீதிமன்றம் ஓங்கி தலையில் குட்டு வைத்தவுடன் அவசர அவசரமாக கோப்புகளை திருப்பி அனுப்புவதும், சில கோப்புகளுக்கு ஒப்புதல் வழங்குவதும் என நாடகமாடுகிறார் ஆளுநர்” என்றார்.