தமிழகத்தில், இன்று வணிகர் தினம் கொண்டாடப்படுவதால் மளிகைக் கடைகள், டீக்கடைகள் மூடப்பட்டுள்ளது.. ஹோட்டல்களுக்கு காலை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வணிகர்கள் மே 5-ந்தேதியை வணிகர் தினமாக கொண்டாடி வருகின்றனர்… வணிகர் தினத்தன்று வழக்கமாக கடைகள் வணிக நிறுவனங்கள் மூடப்படுவது வழக்கம்.
அதேபோல, ஒவ்வொரு வணிகர் சங்கமும் தங்களது சங்க நிர்வாகிகளை திரட்டி மாநாடு நடத்துவதும் வழக்கம்.. ஆனால், கடந்த வருடம் வணிகர் தினத்தன்று இது எதுவுமே நடத்த முடியவில்லை..
கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இருந்ததாலும், அந்த சமயம், புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் சூழல் இருந்ததாலும், கடைகள் திறந்தே இருந்தன.. மாநாடும் நடத்த முடியவில்லை.. ஆனால், இப்போது தொற்று குறைந்துள்ள நிலையில் மாநாடு நடத்த முடிவாகி உள்ளது.. இப்படி நடத்தப்படும் மாநாட்டில், வியாபாரிகளுக்கு ஏற்படும் இன்னல்கள், அதை களைவதற்கான ஏற்பாடுகள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்படுவது வழக்கம்.
அது மட்டுமின்றி வியாபாரிகளுக்கு அரசின் சார்பில் என்ன உதவி வேண்டும் என்பது பற்றியும் கோரிக்கை வைக்கப்படும்.. அந்த வகையில், 39வது வணிகர் தினத்தை முன்னிட்டு, தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், திருச்சியில் இன்று, தமிழக வணிகர் விடியல் மாநாடு நடக்கிறது. வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா முதல்வரை சந்தித்து மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.
மாநாடு நடப்பதால், வணிகர்களின் ஒற்றுமையை பறைசாற்றவும் வணிக சகோதரத்தை நிலை நாட்டவும் மே 5-ந்தேதி வணிகர் தினத்தன்று ஓட்டல்களுக்கு விடுமுறை அளிக்க விக்கிரமராஜா கோரிக்கை வைத்திருந்திருந்தார்.. இதற்காகவே வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு விடுமுறை அளித்து, மாநாட்டுக்கு இன்று செல்கிறார்கள்.. அதேபோல, உணவகங்களுக்கு இன்று காலை ஒருவேளை விடுமுறை அளித்து வணிக ஒற்றுமையை உணர்த்திட முடிவு எடுக்கப்பட்டுள்ளது… இன்று பகல் 12 மணி வரை உணவகங்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கோயம்பேடு மார்க்கெட்டில் மாநாட்டுக்கு செல்லும் வியாபாரிகளின் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழைய பொருள் வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை அளிப்பதாக அறிவித்துள்ளனர். எனினும், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 2 ஆயிரம் காய்கறி கடைகள், 2,000 பழக் கடைகள் மற்றும் ஏராளமான பூக்கடைகள் உள்ள நிலையில், பூக்கடைகள் மட்டும் இன்று இயங்கும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.