நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியவுடன் மாநிலங்களவையும் உடனடியாக இந்த மசோதாவை எடுத்துக்கொண்டு நிறைவேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. 19 அமர்வுகளாக டிசம்பர் 23ம் தேதிவரை அவையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள், விவசாய அமைப்புகள் கடந்த ஓர் ஆண்டாக போராடி வருகிறார்கள். விவசாயிகள் போராட்டம் பல்வேறு வடிவங்களில் தீவிரமடைந்து வந்தது, உச்ச நீதிமன்றமும் தலையிட்டு இந்த சட்டங்களை நிறுத்தி வைத்தது. இதைத் தொடர்ந்து இந்த 3 சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி கடந்த வாரம் மக்களுக்கு உரையாற்றும்போது அறிவித்தார்.
இதையடுத்து, இந்த 3 சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதாவைதாக்கல் செய்ய கடந்தவாரம் மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்தது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில், முதல்நாளிலேயே மக்களவையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகவே அனைத்து எம்.பி.க்களையும் முதல்நாளில் வர வேண்டும் என்று பாஜக கொறடாமூலம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தங்கள் எம்.பி.க்கள் தவறாது இன்று அவைக்கு வர வேண்டும் என கொறடா மூலம் உத்தரவி்ட்டுள்ளனர். மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டவுடன் மாநிலங்களவையும் எடுத்துக்கொண்டு நிறைவேற்றும்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதாவை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களழையில் இன்று அறிமுகம் செய்வார், அங்கு நிறைவேறியபின், அதைத்தொடர்ந்து மாநிலங்களவையிலும் தாக்கல் செய்வார்.
இன்றைய கூட்டத்தில், கிரிப்டோ கரன்ஸி, டிஜிட்டல் கரன்ஸியை ஒழுங்குமுறைப்படுத்தும் மசோாதா, திவால் சட்டத்தில் 2-வது திருத்த மசோதா, மின்சாரத் திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது