தொடர்ந்து நான்காவது வாரமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், இந்த வாரம் மழை படிப்படியாகக் குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், குமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,
இன்று, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, குமரி, தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், மதுரை, நெல்லை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
நவ. 30ல், குமரி, நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
டிச. 1ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
டிச. 2ல், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்துக்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.