ஆவின் டீ மேட் சிவப்பு பால் பாக்கெட் உற்பத்தி நிறுத்தம் வாடிக்கையாளர்கள் பாதிப்பு!
சென்னை: ஆவினில், ‘டீ மேட்’ எனப்படும் சிவப்பு நிற பால் பாக்கெட் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆவின் வாயிலாகவிற்பனைக்கு வரும் சிவப்பு நிற பால் பாக்கெட்டிற்கு, ‘டீ மேட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதில், 6.5 சதவீத கொழுப்பு சத்து உள்ளது. வர்த்தக ரீதியான தேவைக்கு, 500 மி.லி.,டீ மேட் பால், 34 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதே கொழுப்பு சத்துள்ள பால் தனியாரிடம் அதிக விலையில் விற்கப்படுகிறது. தனியார் பால் விற்பனையை பாதிக்கும் என்பதால், சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனையில் ஆவின் அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.
இந்த பால் விற்பனை வாயிலாக, ஆவினுக்கு லிட்டருக்கு, 8 ரூபாய் லாபம் கிடைத்து வந்தது. இந்நிலையில், தனியார் நிறுவனங்களுக்கு மறைமுகமாக உதவும் வகையில் சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்த ஆவின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இயந்திர கோளாறு என்று கூறி மாதவரம் பால் பண்ணையில் இன்று முதல் சிவப்பு நிற பால் பாக்கெட் உற்பத்தி நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மற்ற பால் பண்ணைகளிலும் உற்பத்தியை படிப்படியாக நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இதனால், டீ கடைகள், இனிப்பு கடைகள், கேன்டீன்கள் தேவைக்கு சிவப்பு நிற பால் பாக்கெட் வாங்கியவர்களுக்கு அதை வழங்க முடியாத நிலை பாலகங்களுக்கு ஏற்பட்டு உள்ளது.