நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீப உற்சவம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தீப உற்சவ நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக அயோத்தி நகரின் சரயு நதியின் கரையோரத்தில் ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடினர். இதனால் அயோத்தி முழுவதும் தீப ஒளி வெள்ளத்தில் ஜொலித்து வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளராக சுற்றுலாத்துறை இணை மந்திரி கிஷண் ரெட்டி பங்கேற்றார். மாநில கவர்னர் ஆனந்திபென் படேல், மாநில அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது சுமார் 6 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றியது கின்னஸ் சாதனை படைத்த நிலையில், இந்த ஆண்டு ஒன்பது லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது புதிய கின்னஸ் சாதனை ஆனது.