கொரோனா நோய்ப்பரவல் கட்டுப்பாடு என்ற பெயரில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சிறப்பு ரெயில்களாக கூடுதல் கட்டணத்துடன் இயக்கப்பட்டன. அனைத்து பெட்டிகளும் முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டன. பாசஞ்சர் ரெயில்கள் மற்றும் இணைப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், ரெயில்வே துறை பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக பயணிகள் நலச்சங்கங்கள் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டது.

இந்தநிலையில், மதுரை கோட்டத்தில், ஒரு சில பாசஞ்சர் ரெயில்களை எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் மீண்டும் இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, மதுரையில் இருந்து ராமேசுவரத்துக்கு வருகிற 30-ந் தேதி முதல் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06651) மதுரையில் இருந்து தினமும் காலை 6.35 மணிக்கு புறப்பட்டு காலை 10.15 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.06656) ராமேசுவரத்தில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு இரவு 9.55 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. இந்த ரெயில்கள் கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாசேத்தி, ராஜகம்பீரம், மானாமதுரை, சூடியூர், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், வாலாந்தரவை, மண்டபம் கேம்ப், மண்டபம், பாம்பன் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில் 12 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

திருச்செந்தூரில் இருந்து ஒரு ரெயில் நெல்லைக்கு வருகிற 30-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06674) திருச்செந்தூரில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு காலை 9 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து இந்த ரெயில் (வ.எண்.06677) மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு திருச்செந்தூர் ரெயில் நிலையம் வந்தடைகிறது.

இந்த ரெயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகனேரி, குரும்பூர், கச்சனாவிளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளைங்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில், 10 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

நெல்லையில் இருந்து வருகிற 30-ந் தேதி முதல் செங்கோட்டைக்கு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06657) நெல்லையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.35 மணிக்கு செங்கோட்டை ரெயில் நிலையம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து வருகிற 31-ந் தேதி முதல் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (வ.எண்.06682) செங்கோட்டையில் இருந்து காலை 6.40 மணிக்கு புறப்பட்டு காலை 8.50 மணிக்கு நெல்லை ரெயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரெயில்கள் நெல்லை டவுன், பேட்டை, சேரன்மாதேவி, காரைக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். ரெயிலில் 14 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons